கோவில்களில் சாமி சிலைகளின் நகைகள் கொள்ளை ! அதிரடியாக கைது செய்த கும்பகோணம் போலீசார் !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் பாபநாசம் பகுதியில், கோவில் நகைகள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாபநாசம் கிழக்கு காவல்நிலைய போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்துள்ளனர்.
மேலும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ்ராவத் ஐபிஎஸ் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் மேற்பார்வையில், கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சிவ செந்தில்குமார், தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் ஆகியோர் தலைமையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு, கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அவுலியா நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், கோவில்களில் சாமி கும்பிடுவது போல் உள்ளே நுழைந்து, யாரும் பார்க்காத நேரத்தில், சாமி சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டுள்ள நகைகளை திருடுவதையே வாடிக்கையாக செய்து வந்ததாக கூறியுள்ளனர். பின்னர் கோவில்களில் திருடிய 22 கிராம் தங்க நகைகள், திருட்டிற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனங்கள், ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததோடு, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.
-அப்துல் மாலிக்
செய்தியாளர்