போதை மண்டலமான கொங்கு மண்டலம் !.? பல்லடம் அருகே அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் கரைபுரண்டோடும் போதை நடமாட்டம் குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். பல்லடம் போலீசார் போதை நடமாட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக போதை மாத்திரைகளை விற்ற ஏராளமானோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தற்போது இரண்டாவது அத்தியாயமாக கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஏ. நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஏராளமான போதை ஊசி குவியல்கள், இருமல் டானிக் பாட்டில்கள் ஏராளமாக சிதறிக்கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, பெரும்பாலும் இரவு வேளையில் கும்பலாக வரும் இளைஞர்கள் ஊசி மூலமாக போதையை ஏற்றிக்கொண்டு மயங்கி கிடப்பதாகவும், பின்னர் போதை தெளிந்த பின் சென்றுவிடுவதாகவும் தெரிவித்தனர். ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள தனியார் நிலங்களை வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் எனவும், இருட்டிய பிறகு இந்த வழியாக பெண்கள் நடமாட முடியாத சூழல் உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதலே ஏராளமானோர் இப்பகுதியை ஆக்கிரமித்து போதை மண்டலமாக மாற்றிவிடுகிறார்கள்.
மேலும் இருமல் டானிக் பாட்டில்கள் அதிக அளவில் கிடப்பதால், போதை டானிக்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.