திருவண்ணாமலை : உயிரிழந்த தங்கமணியின் உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தகவல்
திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி உடலில், காயங்கள் இருந்தது முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்த 26ம் தேதி சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, 27ம் தேதி உயிரிழந்தார்.
போலீசாரின் தாக்குதலில் இறந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தங்கமணியின் முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், தங்கமணியின் கைகளில் காயம், ரத்தக்கட்டு உள்ளதாகவும் கை மற்றும் முதுகில் நான்கிற்கும் மேற்பட்ட தடிமனான காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
வலது கையின் பின்புறம் 4 சென்டி மீட்டருக்கு ரத்தக் காயம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மார்பு பகுதியில் உள்ள விலா எலும்புகளில் 2, 3 உடைந்துள்ளதாகவும், அதனுள் ரத்தக்கட்டு இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கமணியின் உடலில் சில காயங்கள் 12 மணி நேரத்திற்கும் முன்பும், சில காயங்கள் 6 மணி நேரத்திற்கும் முன்பாகவும் ஏற்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஏப்ரல் 28-ம் தேதி பிற்பகல் 3.10க்கு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் எஸ்.ராஜசேகரன் என்பவர் மூலம் சடலம் கொண்டுவரப் பட்டதாகவும் அன்று பிற்பகல் 3.55 மணிக்குத் தொடங்கி 5.30 மணிக்கு உடற்கூராய்வு முடிவடைந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
காவல் துறையினர் தாக்கியதால்தான் தங்கமணி உயிரிழந்திருப்பதாக அவரது உறவினர்கள் கூறி வரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் விதமாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்துள்ளது.