புதிய பாதையில், புதிய கோணத்தில் பயணிக்கும் “டீன்ஸ்” படத்தின் திரைவிமர்சனம்
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் “டீன்ஸ்”.
கதைப்படி.. நகர்ப்புறத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் சிறுவர், சிறுமியர் தங்களது வீட்டில் நடைபெறும் சம்பவங்களையும், அவர்களது அடக்குமுறைகளையும் கூட்டமாக அமர்ந்து பேசி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்து வருபவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை பேசிய நிலையில், ஒரு பெண் தனது பாட்டி வசித்துவரும் கிராமத்தின் பெருமைகளையும், அவரது அரவணைப்பு பற்றியும் கூறுகிறாள்.
பின்னர் அனைவரும் பெற்றோருக்குத் தெரியாமல் அந்தக் கிராமத்திற்குச் சென்றுவர வேண்டும் என முடிவு செய்கின்றனர். அதேபோல் மறுநாள் 13 சிறுவர், சிறுமியர் பள்ளியில் வகுப்பு நேரத்தில், ஆசிரியருக்குத் தெரியாமல் வெளியேறி, பேருந்தில் செல்கின்றனர். அப்போது சாலை மறியல் போராட்டம் காரணமாக பேருந்து நிறுத்தப்படுகிறது. ஆகையால் குறுக்கு வழியாக கிராமத்தைச் சென்றடைய, காட்டுப்பாதையை அவர்கள் தேர்வுசெய்து பயணத்தை ஜாலியாக தொடர்கின்றனர். பின்னர் மர்மமான முறையில் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர். அதனைத்தொடர்ந்து பயணித்தபோது பல்வேறு அமானுஷ்யங்கள் நிகழ்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில், சுடுகாட்டில் யோகி பாபு தனி ஆளாக நிற்பதைக் கண்டு அவரிடம் உதவி கேட்கின்றனர்.
அதன்பிறகு எஞ்சிய சிறுவர்கள், கிராமத்தைச் சென்றடைந்தார்களா ? காணாமல்போன சிறுவர்களின் நிலைமை என்ன ? என்பது மீதிக்கதை..
இயக்குநர் பார்த்திபன் தனது ஒவ்வொரு படத்திலும், ஏதாவதொரு புதுமைகளை புகுத்தி, வித்தியாசமான கதைக்களத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். அந்த வரிசையில் 13 சிறுவர், சிறுமியரை தேர்வுசெய்து, அவர்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில், டூயட், சண்டை காட்சிகள், ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக திரைக்கதை அமைத்துள்ளார். அவரது இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள்.
மேலும் அவரது படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, பெரும்பாலான காட்சிகளில் ஆங்கிலம் கலந்த வசனங்கள் இடம்பெற்றுள்ளது. பாடலில் புரியாத வார்த்தைகளையும் புகுத்தியிருக்கிறார். இறுதியில் அவரே ஒன்னுமே புரியலை என்கிறார். புதிய பாதை இயக்குநரின் புதிய கோணத்தில் உருவான டீன்ஸ் கதையை புரிந்துகொள்ள ஞானம் வேண்டும் என்கிறாரோ ! எண்ணமோ !.?