பல்லடத்தில் பேரறிஞர் அண்ணாவை மறந்த அதிமுகவினர் !
பல்லடத்தில் அதிமுகவினரால் பராமரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலை கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுவது அதிமுக பேரறிஞர் அண்ணாவை மறந்துவிட்டனரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக வின் கோட்டை என மார்தட்டிக் கொண்டிருக்கும் வேளையில் பல்லடத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பல்லடத்தின் பிரதான என் ஜி ஆர் சாலையில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் கடந்த 1984 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் சிலை திறக்கப்பட்டது.
அண்ணா பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கடமையை நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலை நிறுவி 39 ஆண்டுகள் கடந்த நிலையில் சிலை வைக்கப்பட்டுள்ள கட்டிட சுவர்கள் சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.
அண்ணாவின் பெயரை முன்னிறுத்தி அரசியல் நடத்தும் அதிமுக அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிப்பதோடு மட்டுமின்றி அண்ணா குடிகொண்டிருக்கும் பல்லடத்தில் சிதிலடைந்த சிலை வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.