தமிழகம்

உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா ! : நீதிபதியை மிரட்டிய காவலர் மகாராஜன்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் சம்பந்தமாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் விசாரணையை மேற்கொண்ட கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசனுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்தனர். காவல்நிலையத்தில் பதிவேடுகளை காவலர்களிடம் கேட்ட போது, இந்த விசாரணையில் உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா என்று நீதிபதியை ஒருமையில் பேசியது தமிழக காவல்துறையில் இதுவே முதல்முறையாகும். நீதிபதியை அச்சுறுத்தும் வகையிலும் காவல்துறையினர் வீடியோ எடுத்ததாகவும் நீதிபதி பாரதிதாசன் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார்.

காவலர் மகாராஜன்

நீதிபதியையே மிரட்டும் அளவுக்கு சாத்தான் குளம் காவல்நிலைய காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள சூழ்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளால் விசாரணை நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பாரதிதாசன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நேரடியாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் படுகொலை சம்பந்தமாக விசாரிக்கும்போது அங்கு பணியில் இருந்த காவலர் மகாராஜன் என்பவர் ஒருமையில் அவதூறாக உன்னால் ஒன்றும் புடுங்க முடியாதுடா என்று கீழ்த்தரமாக நான்காம்தர வார்த்தையைப் பயன்படுத்தி ஒரு நீதிபதியையே ஒரு காவலர் திட்டும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

நீதிபதி பாரதிதாசன் கேட்ட எந்த ஆவணங்களையும் சாத்தான்குளம் காவலர்கள் வழங்கவில்லை. நீதிபதியை ஒருமையில் பேசிய இந்த சம்பவம் டிஎஸ்பி பிரதாபன், குமார் மற்றும் காவலர்கள் முன்னிலையிலேயே நடந்த இந்த சம்பவத்தைப் பார்க்கும்போது சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் இன்னும் அடங்கவில்லை என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. விசாரணைக்குச் சென்ற நீதிபதியையே ஒரு சாதாரண காவலர் மிரட்டும் போது காவல்நிலையத்தில் சாதாரண பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. காவலர் மகாராஜன் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்திருக்கிறார். காவலர் மகாராஜன் பேசிய வார்த்தைகளை அப்படியே தமிழில் உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா என்று எழுதி இருக்கிறார். ஒரு நீதிபதியே காவலர் மீது புகார் அளிக்கும் அவலமான சூழ்நிலைதான் தற்போது தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

ஏற்கனவே டிஎஸ்பி பிரதாபன் தான் பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் உயிருடன் இருப்பதாக கூறி ஏமாற்றி மக்களை கலைந்து போக சொன்னவர். உயர்நீதிமன்ற விசாரணையில் இரட்டை கொலை வழக்கில் காவலர்களுக்கு சாதகமாக ஆவணங்களை தரமறுத்து அத்துமீறும் சம்பவத்தில் அனைத்து தரப்பினரும் கொந்தளிக்கும் விதமாக இருக்கிறது. நீதிபதியே சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் பற்றி புகார் கொடுக்கும் சம்பவத்தால் இந்த இரட்டைக் கொலை வழக்கில் நியாயமான நீதி கடைக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது.

ஏற்கனவே சாத்தான்குளம் காவல்நிலையத்தை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகிளன் பரிந்துரையின்கீழ் விசாரணை மேற்கொண்ட நீதிபதி பாரதிதாசனே தனக்கு பாதுகாப்பு கோரி புகார் அளித்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன்

நீதித்துறையை சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் மிரட்டும் சம்பவம் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையே கேள்விக்குறியாக ஆக்கியிருக்கிறது. இந்த காவலரின் நடவடிக்கை. இதற்கு நீதித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கூறியதுபோல் தரையில் உருண்டு புரண்டதால் தான் காயங்கள் ஏற்பட்டது என்று காவல்துறை கூறிய சம்பவங்கள் அனைத்தும் சிசிடிவி காட்சிகளில் இருவரும் அமைதியாக நடந்து வருவதாக இருக்கிறது. இதனால் காவல்துறை கூறிய தகவல் பொய்யான தகவல் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தந்தை மகன் இருவரும் காவல்துறையினரிடம் கட்டிப்புரண்டு சண்டையிட்டார்கள் என்பதற்கான காட்சிகளும் பதிவாகவில்லை. இந்தப் புகாரும் பொய்யானது என்பது தெளிவாக தெரிகிறது.

சிசிடிவி காட்சிகள் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தாக்கப்பட்ட 19ஆம் தேதி சிசிடிவி காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை.

கோவில்பட்டி சிறைச்சாலையில்தான் இறந்தார்கள் என்ற புகாருக்கு அவர்கள் நடுவரிடம் ஆஜர்படுத்தப்பட்ட போதும், மருத்துவர்களிடம் சான்றிதழ் எதுவும் பெறாதபோதும் சிறைத்துறை ஆவணங்களிலும் முறையாக காவல்துறையினருக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் காவல்துறையினரின் விளக்கம் அனைத்தும் உண்மைதன்மையை மூடி மறைக்கும் விதமாகவே இருக்கிறது.
தமிழக அரசும் முதல் அமைச்சர் ஆகிய இருவரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும்போதும் இவ்வளவு முறைகேடுகள், மிரட்டல்கள், ஆவணங்கள் மறைப்பு போன்றவைகள் நடைபெறுகிறது. சாதாரண சாமானிய மக்களுக்கு அநீதி நடைபெற்றால் அவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சாத்தான்குளம் சம்பவம் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் கவனமும் சாத்தான்குளத்தின் மீது இருக்கும்போது அந்த காவல்நிலைய காவலர் நீதிபதியையே மிரட்டும் சம்பவம் அரங்கேறியது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கப்போகிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

  • சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button