அரசியல்தமிழகம்

ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர ஜெயலலிதாவின் வாரிசான தீபக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவிக்க கோரி தானும், தன் சகோதரி தீபாவும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், வேதா நிலையத்தையும், அங்கு உள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை எனவும் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் குறித்த உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், அது அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். அதனால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்பதால், சட்டத்தை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம் என்றார்.

இதையடுத்து, சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர தீபக் தரப்புக்கு அனுமதியளித்த தலைமை நீதிபதி அமர்வு, அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கை முடித்து வைத்தது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button