திருப்பூரில் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள்.. விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சாமலாபுரம் பேரூராட்சி பகுதியில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது ஏராளமான பொதுமக்கள் தங்களின் தேவைகளை மனுவாக அமைச்சர்களிடம் வழங்கினர்.
அந்த மனுக்களில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை கேட்டு பெரும்பாலானோர் விண்ணப்பித்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை மனுவாகப் பெற்ற அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தொடர்மழையால் பழுதடைந்த சாலைகளை சீர் செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், பேரூராட்சி பகுதிகளில் கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், 24 மணிநேரமும் மருத்துவர்களும், செவிலியர்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என அரசு தலைமை மருத்துவமனை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பேரிடர் காலங்களில் தன்னார்வ நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பேருதவியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசு அதிகாரிகளும் இதுபோன்ற சமயங்களில் காலநேரம் பார்க்காமல் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கியிருக்கும் ஏரி குளங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை விளையாட விட வேண்டாம். மின்சாரத்துறை அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் எந்தநேரமும் தொலைபேசியில் அழைத்தால் அந்த இடத்திற்குச் சென்று மின்பழுதுகளை அகற்றி பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும். மின்கம்பங்களில் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை கட்டுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
கிராமப்புறங்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கிராம பாதுகாவலர்கள் மூலம் கண்காணித்து அந்தப் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை உடனடியாகத் தெரிந்து கொண்டு வட்டாட்சியர் மூலம் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
– சௌந்திரராஜன்