தமிழகம்

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகள்…

திருப்பூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர், நெசவாளர்கள், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த வீடற்ற மக்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் உத்தரவின் பேரில் ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இந்தப் பகுதிகளில் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் எதையும் செய்து கொடுக்கவில்லை. மக்கள் இந்த இடத்தில் வசிப்பதற்கு பேருந்து வசதிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்தல் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் இலவச வீட்டுமனையை பெற்றவர்கள் குடியேறவில்லை. இதனை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்த திட்டம் தீட்டினர். இலவசமாக வீட்டு மனைப்பட்டா வாங்கிய மக்களிடம் சில லட்சங்களை கொடுத்து ஏமாற்றி இடத்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வருகிறது.

ஆதிதிராவிட மக்களுக்கு இரண்டு சென்ட் நிலமும், பிற்படுத்தப்பட்டோருக்கு இரண்டரை லட்ச நிலம், ஒதுக்கி ஆதிதிராவிட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கியதோடு பல்வேறு சலுகைகளை வழங்கியது அன்றைய திமுக அரசு. அதோடு நெசவாளர்களின் பின்தங்கிய நிலையை உணர்ந்து வீடு இல்லாத நெசவாளர் மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கியதை விட அரை சென்ட் அதிகமாக சேர்த்து மூன்று சென்ட் வீட்டு மனைகள் வழங்கியது.

வீட்டிலே தறி நெசவு செய்வதற்கு வசதியாக. இவ்வாறு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் எண்ணத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அபகரிக்கும் அவலநிலை திருப்பூரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறத்தான் செய்கிறது.

அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளை சிலர் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடுவதாகவும் தெரிய வருகிறது. இதுபோன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்தி அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு அரசு வழங்கிய நிலங்களை அபகரித்து, ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியரும் அரசு அதிகாரிகளும் தமிழக அரசு இலவசமாக வழங்கிய இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா? காத்திருப்போம்.

இது சம்பந்தமான விரிவான செய்தி ஆதாரங்களுடன் அடுத்த இதழில்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button