இந்தியாவின் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டு மற்றும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த நவம்பர் 4ஆம் தேதி உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக பேரணி மற்றும் பொது கூட்டத்தை உள்அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளே நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருந்தது.
இதற்குச் சட்ட ரீதியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதால், நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த அணிவகுப்பைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவோர் தரப்பில் தெரிவித்திருந்தனர். ஆனால் ஏற்கனவே கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பேரணிக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி இந்த மூன்று மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.
கடலூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுரம் டிஐஜி காந்திமதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், செங்கல்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் மூன்று மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
குறிப்பாக அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த பேரணி செல்லும் பகுதிகளை சுற்றியிருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மேலும் பேரணியில் பங்கேற்பாளர்கள் தவிர்த்து சாலைகளில் பொதுமக்கள் அனுமதி வழங்கப்படவில்லை.
கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் மாலை 4 மணிக்கு அணிவகுப்பு துவங்கியது. பேரணியை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மனு ஸ்மிருதி பிரதிகளை மக்களுக்கு வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் சுமார் ஆயிரம் பேருக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் விசிக சார்பில், ஒரு லட்சம் பேருக்கு விலை இல்லாமல் மனுஸ்மிருதி புத்தகம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மனுஸ்மிருதி என்பது இந்துக்களின் வேத நூலாகவும் வழிகாட்டு நூலாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்து சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் 1950இல் நடைமுறைக்கு வந்தாலும் மனுஸ்மிருதி இன்னும் வழக்கத்தில் தான் உள்ளது. மனுஸ்மிருதி அடிப்படையில் தான் குடும்ப நிகழ்வுகள் சடங்குகள், சம்பிரதாயங்கள் திருமணங்கள், ஈம சடங்குகள் என அனைத்தும் நடைப்பெற்று வருகிறது. பார்ப்பனம் முதல் சூத்திரர் வரை 50 விழுக்காடாக உள்ள பெண்கள், சூத்திரர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது மனுஸ்மிரிதியின் வழிகாட்டுதல்.
ஆர்எஸ்எஸ்&ன் வழிகாட்டுதலை மக்களுக்கு வெளிக்கொண்டு வர இந்த புத்தகம் விசிக சார்பாக மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இதனை தங்களது கலாச்சார கொள்கையாக ஏற்றுக்கொண்டு நடந்து வருகிறார்கள். `சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை கூடாது’ என்பதுதான் மனுஸ்மிருதியின் அடிப்படை கருத்து. அதை அடிப்படை கொள்கையாகக் கொண்டுள்ள இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக. அப்படியிருக்க, ஆர்எஸ்எஸ் ஏன் தனியாக பேரணி நடத்த வேண்டும்?
உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தான் பயந்து ஓடிப்போய் இருக்கிறார்கள். இன்று மக்கள் தாங்களாகவே வந்து கேட்டு வாங்கக்கூடிய அளவிற்கு இந்த புத்தகம் உள்ளது. அவர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு இந்த புத்தகம் மக்கள் மத்தியில் சென்றடைகிறது. இது சமூக நீதிக்காண மண் என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும். பாஜக நடத்திய பேரணிகளை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் என்ற அச்சத்தில் நாங்கள் இதை எதிர்க்கிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளிப்படையாக மதவெறியையும் சாதி வெறியையும் தூண்டக்கூடிய அரசியலையே செய்து வருகிறது.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு இந்தியாவிலேயே இடம் இருக்காது. ஏனெனில் அந்தளவுக்கு அது ஒரு பயங்கரமான இயக்கம். சிஏஏ கொண்டு வர காரணமாக இருந்த அமைப்பு ஆர்எஸ்எஸ் இவர்களுக்கும் பாஜகவுக்கும் தனியாக அரசியல் கோட்பாடுகள் இல்லை” என்றார்.