சென்னையில் தொடர் வழிப்பறி திருட்டு : அச்சத்தில் மக்கள்..!
ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் கடந்த 28ஆம் தேதி காலை 4.45 மணிக்கு தனது பைக்கில் தனது அத்தையை அழைத்து சென்று கலாசேத்திரா பகுதியில் இறக்கி விட்டுவிட்டு அடையாறு எல்பிரோடு வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஐந்து பேர், முகத்தை கைக்குட்டையால் மறைத்து கொண்டு, 2 பைக்கில் வந்து, வினோத் குமாரின் பைக்கை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரது 4 சவரன் செயின் மற்றும் செல்போனை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் திருவான்மியூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து தெற்கு கூடுதல் காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை ஆணையர் மகேஷ்வரி ஆகியோரின் மேற்பார்வையில், அடையாறு துணை ஆணையர் பகலவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் தேனாம்பேட்டையை சேர்ந்த விக்ரம், தினேஷ், வெள்ளை சிவா, நவீன், பார்த்திபன் என்பது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 பைக்குகள், நான்கரை சவரன் நகைகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மகிழ்ச்சியாக பொழுதை போக்க பணம் தேவைப்பட்டதால், இவர்கள் திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி, கிண்டி மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளில் இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. வழிப்பறி செய்தவர்களை விரைந்து பிடித்த தனிப்படையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.
இதேபோல் சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே, துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம், பணம் வழிப்பறி செய்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த வாசு என்பவர்,செங்குன்றத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் மீஞ்சூரை அடுத்த சீமாவரம் ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது, அவரை வழிமறித்த 2 பேர், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.
அதை தடுக்க முயற்சித்த அங்கிருந்த பொது மக்களிடம் கை துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து விசாரணை செய்த போலீசார், கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், கொள்ளையர்கள் இருவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், அவர்கள் புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மணி மற்றும் கோடுவள்ளியைச் சேர்ந்த யுவராஜ் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து கை துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை கோயம்பேடு பகுதியில், வரிசையாக 3 இடங்களில் நடந்த வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர், கர்நாடகா மாநிலத்தின் வேறு ஒரு பிரிவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒரு வார விடுப்பில் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
கோயம்பேடு வந்த அவர், கோயம்பேடு பூ மார்க்கெட் எதிர்புறம் உள்ள பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை கண் விழித்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 20,000 ரூபாய், செல்போன் மற்றும் வாட்ச் ஆகியன திருடு போயிருந்தன. இதுகுறித்து தாமஸ், கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கூலித்தொழில் செய்து வரும் ராஜா என்பவர், காலை மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட்டில் சுற்றித்திரிந்தபடி அங்கு வந்த சரண் என்பவர், ராஜாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
ராஜா பணம் கொடுக்க மறுக்கவே, சரண் தான் வைத்திருந்த சிறிய மடக்கு கத்தியால் ராஜாவின் கன்னத்தில் கீறிவிட்டு, அவரது பாக்கெட்டில் இருந்த 5,500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சரணை தேடி வருகின்றனர்.
நெற்குன்றம் பகுதியில் வசித்து வரும் சசிகலா என்பவர், அறந்தாங்கியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, 9ம் வகுப்பு படிக்கும் தனது மகளை வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார். இந்தநிலையில், அவரது மகள் வீட்டை பூட்டிகொண்டு சாவியை கழிவறையில் வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.
சிறுமி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததோடு, வீட்டிலிருந்த இரு பீரோக்களும் திறக்கப்பட்டு அதில் இருந்த 5 சவரன் நகை காணாமல் போயிருந்தன. இதுகுறித்து சிறுமியின் தாய் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோயம்பேடு பகுதியில் அடிக்கடி நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவதால், இதனை தடுக்க இரவு நேரத்தில் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துதின்றனர்.