தமிழகம்

தொடரும்… பெண்கள் மீதான வன்முறைகள்: சட்டம் கடுமையாக்கப்படுமா?

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன். இவரது மகள் கல்பனா(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கல்பனாவும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீகர்(33) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.
இந்தச் சூழலில் கல்பனா ஸ்ரீகரை காதலிப்பது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவரது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி கல்பனா தனது காதலன் ஸ்ரீகர் வீட்டிற்கு நேரில் சென்று ‘உங்கள் மகன் ஸ்ரீகரும் நானும் காதலித்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி’ கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீகரின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்பனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மறுநாள் 11ஆம் தேதி கல்பனா வீட்டிற்கு வந்த ஸ்ரீகரின் உறவினர் கண்ணன் மற்றும் ரகு ஆகிய இருவரும் கல்பனாவின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ஸ்ரீகரை கல்பனா தொந்தரவு செய்யக்கூடாது எனவும் இருவருக்கும் இடையே திருமணம் எதுவும் நடக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


இதனால் மனமுடைந்த கல்பனா, அவர்களின் கண் முன்னே தனி அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்பனாவின் பெற்றோர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின் விரைந்து வந்த காவல்துறையினர் கல்பனாவின் உடலை கைபற்றி பிரோத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கல்பனாவின் தந்தை ஆதிகேசவன் கல்பனாவின் தற்கொலை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் எனது மகள் தற்கொலைக்கு காரணமான ஸ்ரீகர் மற்றும் அவரது குடும்பத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விஷ்ணு காஞ்சி போலீசார் கல்பனாவின் காதலன் ஸ்ரீகர் மற்றும் அவரது உறவினர் ஸ்ரீராம், மாலா, கண்ணன், ரகு, உமா ஆகிய 6 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் தற்கொலைக்கு தூண்டியது எனப் பல பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரில், கண்ணன் என்பவரை மட்டும் தற்போது கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணன் காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தற்போது இவர் அதிமுகவின் செயலாளராக இருந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள 5 பேரையும் 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கல்பனா தற்கொலை செய்து கொண்டு 5 நாட்கள் ஆகியும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாக தெரிகிறது.
இதேபோல் ஆவடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், அதுதொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர், பத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (25). இவர் எம்பிஏ பட்டதாரி. இவரும் ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சார்ந்த ஒரு பெண்ணும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். அச்சமயத்தில் ஜெயபிரகாஷ் திருமண ஆசை காட்டி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இருவரும் ஒன்றாக இருந்தபோது, அதுதொடர்பான ஆபாச படங்களையும் ஜெயபிரகாஷ் தனது செல்போனில் எடுத்து வைத்து உள்ளார். இதற்கிடையில், சமீப காலமாக அந்தப் பெண், ஜெயபிரகாசிடம் பழகுவதை தவிர்ந்து விலகி சென்றுள்ளார். மேலும், அவர் வேலை செய்யும் இடத்தில், வேறு ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண்ணிடம் சென்ற ஜெயபிரகாஷ், உன்னை நான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு, இந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், நாம் காதலித்தபோது இருவரும் ஒன்றாக எடுத்த படங்களை உனது பெற்றோர், உறவினரிடம் காட்டுவேன் என்றும் மேலும், அப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஜெயபிரகாஷ் மீது 376 சட்டவிதிகளின் படி மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய வழக்குகளில் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், காதலரை மறந்து விட சொல்லி மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவமும், இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் அதுதொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டிய சம்பவமும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளும், சட்டங்களும் தற்போது தேவை என்பதையே காட்டுகிறது.

வனத்துறை அலுவலர் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்த மாரந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தமிழக அரசின் வனத்துறை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாதவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் தனது உறவினர் இல்ல நிகழ்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது சோனையன் கோயில் அருகில் அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மது போதையில் மாதவியிடம் தவறாக நடக்க முயன்றதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது திருநாவுக்கரசுக்கும் ராகுலுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து இளஞ்சம்பூர் காவல்நிலையத்தில் மாதவியும் அவரது கணவர் ராகுலுடன் சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மது போதையில் இருந்த திருநாவுகரசு என்பரை இளஞ்சம்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button