ஆயில் திருட்டு.. லாரி பறிமுதல், குடோன் உரிமையாளர் கைது
அரசின் எண்ணெய் நிறுவனங்களின் குடோனில் இருந்து லாரிகளில் கொண்டு செல்லப்படும் பெட்ரோல், டீசல், பர்னஸ் ஆயில் போன்றவற்றை திருடி, கலப்படம் செய்து பணம் சம்பாதிக்கும் திருட்டு கும்பல்கள் கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பெருகி உள்ளது அனைவரும் அறிந்ததே.
இது சம்பந்தமாக கோவை மாவட்டத்தில் தென்னம்பாளையம் பகுதியில் ஆயில் திருட்டு கும்பல் பற்றிய செய்தி கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக கோவை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கி சம்பந்தப்பட்ட ஆயில் திருட்டு கும்பல் நடத்திய குடோனை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியான தருணத்தில் இருந்த நிலையில், மேலும் திருப்பூர் கோவை மலுமிச்சம்பட்டியில் சுடரொளி எண்டர்பிரைசஸ் என்கிற பெயரில் தண்டபாணி என்பவர் குடோன் அமைத்து ஆயில் திருட்டில் வெகுநாட்களாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த தகவல்கள் நமது குழுவினருக்கு கிடைத்ததின் அடிப்படையில், தொடர்ந்து கண்காணித்ததில் TN 18 J 2525 என்கிற டேங்கர் லாரி அந்த குடோனுக்குள் ஆயில் திருடிவிட்டு வெளியே சென்றபோது, வீடியோ, புகைப்படம் ஆதாரங்களுடன், சம்பந்தப்பட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், துரிதமாக செயல்பட்டு கோவை, திருச்சி நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியை கைப்பற்றி ஓட்டுநரிடம் வாக்குமூலம் பெற்று, சுடரொளி எண்டர்பிரைசஸ் குடோனில் ஆய்வு செய்தபோது, ஆயில் திருடியது நிரூபணமாகியுள்ளது. பின்னர் ஓட்டுநர் குணசீலன், குடோன் உரிமையாளர் தண்டபாணி என்பவரையும் கைதுசெய்து செய்துள்ளனர். லாரியில் திருடிய 12,600 லிட்டர் பர்னஸ் ஆயில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியினர் கூறுகையில்.. கோவை மண்டல உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள் கவனத்திற்கு.. சூலூர் பிரிவில் சிக்கல் சண்முகம், சுடலை, மூர்த்தி ஆகிய மூவரும் வரும் ஆயில் திருட்டில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்களிடம், ஆயில் திருட்டு நடக்கும் இவர்களது குடோனுக்கு லாரிககளை வரவழைத்து ஆயில் திருடி வருவதாக கூறப்படுகிறது. லாரி ஓட்டுநர் காளிமுத்து என்பவர் அதற்கான கமிஷன் தொகையை வசூலித்து வருகின்றார் எனவும் தெரியவந்துள்ளது.
இதேபோல் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் தொடர் ஆயில் திருட்டு நடைபெறுவதாகவும், அப்பகுதியில் பாலு, ஜஸ்டின், சேகர், மாசி செந்தில், பிருதிவிராஜ் ஆகியோர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கோவை மண்டல காவல்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.