பல்லடம் அருகே… சாலையோரம் மண்ணை கொட்டி அழகு பார்க்கும் நெடுஞ்சாலைத்துறை !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை கடந்து செல்லும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காரணம்பேட்டையில் இருந்து மாதப்பூர் வரையுள்ள சுமார் 13 கிலோமீட்டர் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட பிறகு குப்புசாமி நாயுடுபுரம், அண்ணா நகர், காரணம்பேட்டை என சில பகுதிகளில் ஏற்கனவே இருந்த சாலை மீது ஜல்லிகற்களை கொட்டி தார் ஊற்றி சாலையை உயரப்படுத்தி நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை மேம்படுத்தினர்.

இதனிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தார் ஊற்றி சாலையை பாலிஸ் செய்தது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல்லடம் நகரப்பகுதியில் போலீஸ் ஸ்டேசன் எதுரே சாலை வலைந்து நெழிந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

மேலும் மக்கள் அதிக நடமாட்டமுள்ள லட்சுமி மில்ஸ் பகுதியில் சாலையோரம் மேடான பகுதியை சமன்படுத்த ஆங்காங்கே பெயருக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்கள் நடக்காமல் இருக்க மையத்தடுப்பு கம்பிகள் போடப்பட்டு சேதமடைந்திருப்பதால் அதன் வழியாக ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக மையத்தடுப்பு கம்பிகள் பராமரிக்கப்படுவதில்லை. எனவே சாலையோரம் மண்ணைக்கொட்டி அழகு பார்ப்பதை விடுத்து பொதுமக்களின் உயிரை காப்பாற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.