திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் வகுப்பறைகள் இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திலகவதி என்பவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இதனிடையே தற்போது புதிதாக மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பில் புதிதாக சேர நான்கு மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், போதிய இடவசதி இல்லாததை காரணம் காட்டி மாணவிகளை சேர்க்க தலைமை ஆசிரியர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி மேலாண்மை குழுவில் பெற்றோர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, தலைவர் அபிராமி, உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஆர். ரவி மற்றும் பெற்றோர் சங்க தலைவர் நாகராஜ் ஆகியோர் தலைமை ஆசிரியர் திலகவதியிடம், புகார் குறித்து விளக்கம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தவறாக புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறுப்பினர்கள் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியையும் போட்டிக்காக தானும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல் துறையினர் மற்றும் முன்னாள் எம்.எல் .ஏ. நடராஜன் இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் பேச்சுவார்த்த்சியின் போது தனது இருக்கையில் அமர மறுத்து தலைமை ஆசிரியை அடம்பிடித்துள்ளார். பின்னர் ஒரு வழியாக இருக்கையில் அமர்ந்த தலைமை ஆசிரியை வகுப்புறைகள் பற்றாக்குறை குறித்து கூறியதோடு, தனது தரப்பு நீண்ட விளக்கம் அளித்தார். பின்னர் ஒரு வழியாக நான்கு மாணவிகளின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் தலைமை ஆசிரியை திலகவதியின் செயல்பாடுகள் குறித்து அதிர்ப்தி அடைந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் அபிராமி, உறுப்பினர் ஆர்.ஆர் . ரவி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நாகராஜ் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் கொடுத்தனர். பள்ளி வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி பாடுபடும் மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் இணைந்து தலைமை ஆசிரியர் செயல்பட்டால் மட்டுமே பள்ளி மேண்மை பெறும்.