நித்யானந்தாவின் புதிய அறிவிப்பு
தனது அடுத்த டார்கெட் ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்று நித்யானந்தா வெளிப்படையாக அறிவித்துள்ளார். கைலாசா என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக நித்யானந்தா ஆரம்பித்த காமெடி, தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டுவருகிறார்கள். ஆனால், அவற்றை மிஞ்சும்வகையில் வாழைப்பழ காமெடி ரகத்தில் நித்யானந்தா ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தனிநாடு எங்கே அமைக்கப்போகிறீர்கள் என்று கேள்வி எழுந்த நிலையில், சிவத்தை உணர்ந்தால், உங்களுக்குள் கைலாசா உருவாகும் என்று காமெடியாக பேசி, தனிநாடு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால், தனது அடுத்த டார்கெட் ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்று நித்யானந்தா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
தனது சத்சங்கத்தின் போது, ராவணனை திட்டித்தீர்த்த நித்யானந்தா, ராவணன் ஒரு முட்டாள் என்று குறிப்பிட்டார். மேலும் ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டுத் தூக்க முயன்றான்.
கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள்பொலிவுக்கு காரணம் என நினைத்தான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக் கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்துச் சென்று ஸ்ரீலங்காவில் வைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு நித்யானந்தா அனுப்பிய கடிதத்தில், தன்னையும் தனது சீடர்களையும் அழித்தொழிக்கும் வேலையில் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இப்போது அப்படியே பல்டி அடித்துள்ளார். நான் அரசியல் பற்றி பேசவரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் பொருளாதார ரீதியில் இந்தியா செழிக்கும், ஏனெனில் சமூகத்திற்கு பங்களிப்பதுதான் ராமரின் கொள்கை. இந்திய மனங்களில் அந்த ராமரின் கொள்கைகள் மீண்டும் நடைமுறைக்கு வந்தால் ராமபக்தி மீண்டும் வந்தால் உலகிற்கு பங்களிக்கும் அளவுக்கு இந்தியா செழித்து விடும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களித்ததாகும்.
நான் எந்த அமைப்பிலும் இல்லை என்ற போதிலும், எனது சந்நியாசிகளும் சீடர்களும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்கும்படி நான் வலியுறுத்துகிறேன். நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப்போவதில்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள். எனக்குத் தெரியும். அதனால் ராமர் கோவில் கட்ட முறையான வழியில் நான் பங்களிப்பேன்.
உலகில் எங்கோ இருந்தபடி நித்யானந்தா தினசரி உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்க, கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான பிடியை இறுக்கியிருக்கிறது. வரும் 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து சொல்லவேண்டும் என்று அம்மாநில போலீசாரை கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.