தமிழகம்

கோவை கே.எம்.சி.ஹச் மருத்துவமனையில், ஆணவக் கொலை, கொலையாக மாறியது எப்படி ?.! பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறல்

கோயம்புத்தூரில் அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிரபல தனியார் மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் (CMCH ) மருத்துவமனையில், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கம்பிகளை திருட முயன்றதாக கூறி, ஒருவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையின் வர்த்தக பிரிவு மேலாளர் நாராயணன் உட்பட 8 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு பீளமேடு காவல் நிலைய போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் நேரில் வந்தால் மட்டுமே இறந்தவரின் உடலை பெற்றுக் கொள்வோம். இல்லாவிட்டால் தீக்குளிப்போம் என அவரது குடும்பத்தினர் கூறியதால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

கோவை காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், ராஜா கடந்த திங்கள் கிழமை காலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாத சூழலில், செவ்வாய்க்கிழமை காலையில் அவரது வீட்டிற்கு சென்ற மூன்றுபேர், தாங்கள் காவலர்கள் என்று கூறி, ராஜா குறித்து அவரது மனைவியிடம் விசாரித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அன்று மதியம் பீளமேடு காவல் நிலையத்தில் இருந்து ராஜாவின் மனைவி சுகன்யாவை அழைத்த காவல்துறையினர், உடனடியாக கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு வருமாறு கூறவே, பதறி அடித்து சுகன்யா அங்கு சென்றபோது ராஜா உயிரிழந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்காததை தொடர்ந்து சுகன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு கடும் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் உடல் முழுவதும் துணி சுற்றிய படி மருத்துவமனை நிர்வாகத்தினர் ராஜாவின் உடலை, அவரது மனைவி சுகன்யாவிடம் காண்பித்துள்ளனர். அப்போது துணியை அகற்றி, தனது கணவர் உடலை காண்பிக்க வேண்டும் என்று அவர் கதறி அழுதுள்ளார். பின்னர் துணியை அப்புறப்படுத்தி காண்பித்த போது உடல் முழுவதும் வீக்கத்துடன், இரத்த காயங்களும் இருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், உயிர் இழந்த ராஜா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருட முயற்சித்ததாகவும், அதனால் மருத்துவமனை காவலாளிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை பிடித்து கடுமையாக தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மயங்கி சரிந்த நிலையில், அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

அதே வேளையில் திருட்டு சம்பவம் தொடர்பாகவோ, ராஜா உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவோ காவல்துறையினருக்கு எந்த தகவலும் அளிக்காத மருத்துவமனை நிர்வாகத்தினர், அடையாளம் இல்லாத சடலம் என்ற அடிப்படையில் உண்மையை மறைக்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து தகவலறிந்த பீளமேடு காவல்நிலைய போலீசார் மருத்துவமனையில் விசாரணையை துவக்கியுள்ளனர்.
அப்போது ராஜா வின் குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகத்தினர், ராஜாவை கொலை செய்து விட்டனர். எனவே  மருத்துவமனை மீதும், ராஜாவை தாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ராஜாவை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 174 சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த பீளமேடு காவல்நிலைய போலீசார், இன்று அதனை கொலை வழக்காக மாற்றி கே.எம்.சி.எச் மருத்துவமனையின் பொது மேலாளர் நாராயணன், வர்த்தகப்பிரிவு மேலாளர் சசிகுமார், மருத்துவமனையின் நெட்வொர்க் பிரிவு அலுவலர்  சரவணன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ் மற்றும் காவலாளிகள் சரவணகுமார், மணிகண்டன், சதீஷ்குமார், சுரேஷ் உள்ளிட்ட எட்டப்பேரை பீளமேடு காவல் நிலைய போலீசார் கைது செய்து, முகமூடி அணிந்தபடி காவல் நிலையத்திலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து கோவை ஜே.எம் – 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில்  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவரது மனைவி சுகன்யா, மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு வந்து தனது கணவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும். அதன் பிறகுதான் உடலை வாங்குவோம். இல்லாவிட்டால், இங்கேயே தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

– நந்து

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button