சாமானியனாக சாதித்தது.. ராமராஜன் !.? லியோ ! “சாமானியன்” படத்தின் விமர்சனம்
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி. மதியழகன் தயாரிப்பில், ராமராஜன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், லியோ சிவக்குமார், நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி, மைம் கோபி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில், ராகேஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சாமானியன்”.
கதைப்படி.. சென்னையில் உள்ள வங்கியில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், துப்பாக்கியிடன் சங்கரநாராயணன் ( ராமராஜன் ) உள்ளே புகுந்து,வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார். அதே நேரத்தில் வங்கியின் மேலாளர் போஸ் வெங்கட் வீட்டில் மனைவி, குழந்தை இருவரையும் துப்பாக்கி முனையில் எம்எஸ் பாஸ்கர், உதவி மேலாளர் மனைவியை ராதாரவி என இருவரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த சென்னையே பரபரப்பாகிறது. வங்கியில் சிக்கிய பொதுமக்களும், ஊழியர்களும் உயிர் பயத்தில் நடுங்குகின்றனர். மாநகர காவல் ஆணையர் தலைமையில், காவல்துறையினர் வங்கியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்தவித பதட்டமும் இல்லாமல் சங்கரநாராயணன் காவல் ஆணையர் கே.எஸ். ரவிக்குமாருடன் நிபந்தனைகள் விதித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
வங்கிக்குள் நுழைந்து அனைவருக்கும் உயிர் பயம் காண்பிக்கும் இந்த மூவரும் யார் ? எதற்காக செய்கிறார்கள் ? காவல்துறையினர் வங்கியையும், மக்களையும் மீட்டார்களா ? என்பது மீதிக்கதை..
வங்கிகளில் கடன் வாங்கும் சாமானிய மக்களிடம், வங்கி அதிகாரிகள் காட்டும் கெடுபிடிகள், அநியாய வட்டி, அராஜகம் உள்ளிட்ட அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதால், மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனங்கள் செய்யும், தவறான கட்டுமானங்களால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இயக்குநர் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு வயதான காரணத்தால் ஒரே இடத்தில் அமர வைத்து வேலை வாங்கியிருக்கிறார். ராமராஜன் பருமனான உடலமைப்புடன் இருப்பதால் இதற்குமேல் அவரை வேலை வாங்கமுடியாது என்பதால், அவரை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ராமராஜனும் முடிந்தளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.
நாயகனாக லியோ சிவக்குமார் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். அவரது முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் அவரது நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. எம்எஸ் பாஸ்கர், ராதாரவி ஆகிய இருவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. இளையராஜாவின் இசையும், பாடல்களும், முந்தைய ராமராஜன் படங்களுக்கு கை கொடுத்தது போல் இந்தப் படத்திற்கு அமையவில்லை.