ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின், அறிவுக் கண்ணை திறக்க பாடுபடும் விமல் ! “சார்” திரைப்படத்தின் விமர்சனம்
தொடக்கப் பள்ளி தொடங்கி, அதனை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி, அது உயர்நிலைப் பள்ளியாக உயர்வது வரை, கல்விக்கு எதிரானவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள் எதிர்ப்புகள், போராட்டங்கள், வலிகள் என்பனவற்றைக் கருவாகக் கொண்டு, அவற்றைச் சரியான முறையில் காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் சார்.
ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர். அது அவ்வூரில் இருக்கும் உயர் சாதியினருக்குப் பிடிக்கவில்லை. பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள். தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையினருடன் முடிவுக்கு வருகிறது. அது எப்படி ? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம்.
நாயகனாக நடித்திருக்கும் விமல், துறு துறு இளைஞராகத் தொடங்கி பொறுப்பான ஆசிரியராக மாறும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். எல்லா நிலைகளிலும் பொருத்தமாக நடித்து தன்னை நிருபித்திருக்கிறார். இறுதிக்காட்சியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் அவருடைய நாயக பிம்பத்தைப் பன்மடங்கு உயர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவியை படத்துக்கும், பாடல்களுக்கும் ஒரு நாயகி தேவை என்பதற்காக வைத்திருக்கிறார்கள் என்று எண்ணும் நேரத்தில், கதைக்குள்ளும் அவரைக் கொண்டு வந்துவிட்டார்கள்.
அவரும் இயல்பாக நடித்து இருக்கிறார்.
கறுப்புச் சட்டையோடு பள்ளி ஆசிரியராக வரும் நடிகர் சரவணன் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கத் துடிக்கிறார். அவர் பேசும் வசனங்கள், நடத்தும் பாடங்கள், மனநிலை தவறியவராக நடிக்கும் நடிப்பு ஆகியனவற்றில் முத்திரை பதிக்கிறார்.
வ.ஐ.ச. ஜெயபாலன் மற்றும் தயாரிப்பாளர் சிராஜ் ஆகியோர் எதிர்மறை வேடம் ஏற்றிருக்கிறார்கள். எதிரியை அடுத்துக் கெடுக்கும் முயற்சியில் இறங்கும் சிராஜ் அதற்கேற்ற வகையில் நடித்து அந்தப் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
ரமா, எலிசபெத், சரவணசக்தி,
கஜராஜ் உள்ளிட்ட பிற நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இனியன் ஒளிப்பதிவில், காட்சிகளில் தெளிவு, திரைக்கதைக்குப் பலம் கூட்டியிருக்கிறார்
சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கதையின் கருத்துகளை பாடல்வரிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் போஸ்வெங்கட். கிராமங்களில் இன்றும் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் விளைவுகள் ஆகியனவற்றைப் பின்புலமாக வைத்து கல்வியை முன்னால் நிறுத்தி கதை சொல்கிறார். கஜராஜ் கதாபாத்திரத்தை வைத்து ஆதிக்க சாதியினருள் இருக்கும் ஜனநாயக சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்.
கல்விக்கு எதிராக கடவுள் பக்தியை முன்னிறுத்தி சூழ்ச்சி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். சிறுதெய்வ வழிபாடுகள் வர்ணாஸ்ரமத்துக்குள் வராது என்பதைக் கவனத்தில் கொண்டிருக்கலாம்.