கண்ணீர் சிந்தும் குன்னூர் மக்கள் ! ஏன் ?
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது குன்னூர். எந்நேரமும் குலுகுலுவென பனி போர்த்திய பிரதேசமாக காணப்படும் குன்னூரின் அழகைக்கண்டு வியக்காதவர்களே இல்லை என கூறலாம்.
குன்னுர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை தற்போதய மதிப்பீடின் படி 61,0000 ஆகும். 30 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகராட்சியின் தலைவர் ஷீலா கேத்தரின், துணைத்தலைவராக வாஷிம் ராஜா ஆகியோர் உள்ளனர்.
மேலும் கல்வியறிவு பெற்றவர்களில் ஆண்கள் 95.91 %, பெண்கள் 89.18 % ஆகவும் உள்ளனர். இங்கு கோடை காலத்தில் சுற்றுல்லா பயணிகள் வருகை அதிகளவு காணப்படுவது வழக்கம். இதனிடையே கடந்த 4 ஆண்டுகளாக குன்னூர் 30 வது வார்டு கன்னிமாரியம்மன் கோவில் வீதியில் சரிவான நடைபாதையின் படிக்கட்டுகள் மோசமான முறையில் சேதமடைந்துள்ளதோடு வீதிகளில் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீடுகளுக்குள் உட்புகுவதால் நோய்த்தொற்று எற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை குன்னுர் நகராட்சி நிர்வாகத்திடமும், வார்டு உறுப்பினரிடமும் பொதுமக்கள் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்திவரும் இந்த மோசமான நடைபாதையில் அடிக்கடி வயதானவர்கள் இரவுநேரங்களில் தவறி விழுந்து அடிபட்டு காயம் ஏற்படும் அவலமும் எற்படுகிறது. காலை நேரங்களில் பள்ளி குழந்தைகளும் இந்த பாதையையே பயன்படுத்த வேண்டி உள்ளது என தங்களது குறைகளை குன்னூர் மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் பசுமையாக தெரியும் குன்னூர் நகராட்சி 30 வார்டு மக்களின் உள்ளக்குமுறலுக்கு இனியாவது நகராட்சி நிர்வாகம் செவிசாய்க்குமா?