ஜெயலலிதா வீட்டை அரசுடமையாக்கியது செல்லாது..: தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வாரிசுகள் தரப்பில் வாதாடினர்.
அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சேஷசாயி, ‘வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய உத்தரவு செல்லாது’ என தீர்ப்பளித்தார். மேலும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களுக்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார். ‘வேதா இல்லம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என ஜெயலலிதாவுக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு?’ எனவும் நீதிபதி சேஷசாயி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், வேதா இல்லம் தொடர்பாக கட்சி உரிய நேரத்தில் தகுந்த முடிவை எடுக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் கூறியிருந்தார். போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய 67 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா செலுத்தவேண்டிய வருமான வரி பாக்கி தொடர்பான வழக்கை வருமான வரித்துறை தனியாகத் தொடங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறுகையில், இது சாதகமான தீர்ப்பே அல்ல மாறாக இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம் எனவும் தீபா கூறியுள்ளார்.
இந்நிலையில், வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபா, தீபக் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து மனு அளித்துள்ளனர்.
இந்த மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.