ஒரு நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். சுறுசுறுப்பு, உற்சாகம், நடனம், சண்டைப் பயிற்சி, கொள்கை, ஏழைகள் மீது கருணை, தொழிலாளர்கள் மீது மரியாதை, தாய் மீதான பக்தி, நாட்டின் மீதும் மக்கள் மீதுமான ஈடுபாடு போன்ற எம்ஜிஆரின் பாத்திர வார்ப்புகள் மிக எளிதாக மக்களை வசீகரித்தன.
தெய்வத்தின் இடத்தில் தாயை மாற்றாக வைத்து இயற்றப்பட்ட பாடல்களும், வசனங்களும் எம்ஜிஆருக்கு தாய்க்குலத்தின் ஆதரவைப் பெற்றுத்தந்தது.
ஏசு, புத்தர், காந்தி கொள்கையை பின்பற்றி அகிம்சையைப் போற்றும் காட்சிகளையும் பாடல்களையும் எம்ஜிஆர் தமது படங்களில் தவறாமல் இடம் பெறச் செய்தார்.
மீனவர்கள், தொழிலாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், விவசாயிகள், குறவர்கள் என வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த அத்தனை மக்களின் உணர்வுகளையும் சினிமாவில் பிரதிபலித்தவர் எம்ஜிஆர்.
கொள்கையில் உறுதியும் அகிம்சையும் மதித்து நடந்த எம்ஜிஆரின் பின்னால் தமிழகமே அணிவகுத்து நின்றது. அரசியலிலும் அவர் மாபெரும் தலைவராக உயர்ந்தார். அதிமுக நிறுவனராகி, தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்து வெற்றிக்கொடி நாட்டியவர்….
மனிதன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை என்று தாம் பாடிய பாடலுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் எம்ஜிஆர். அவருக்கு இதுபோன்ற பல பிறந்தநாட்கள் இனியும் வரும். எப்போதும் மக்கள் அவரை கொண்டாடுவார்கள். அவர் காலத்தையே வென்றவர்.
நடிகராய் வாழ்க்கையை தொடங்கி ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைவராய் உயர்ந்து தமிழகத்தில் இன்றும் மறக்கமுடியாத பெயராய் சரித்திரம் படைத்தவர் தான் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ராமச்சந்திரன். சதி லீலாவதி படம் மூலமாக திரையில் தோன்றிய இவர், சினிமாவையே தனது பிரசார மேடையாக்கி தமிழக முதலமைச்சர் எனும் அரியணையை எட்டிப் பிடித்தவர்.
சிறந்த மகன், தலைசிறந்த தனையன், ஊருக்கு உழைக்கும் தலைவர், அநியாயங்களை தட்டிக் கேட்கும் ஹீரோ என எம்.ஜி.ஆர் ஏற்ற கதாபாத்திரங்களால் இவரை தங்கள் வீட்டு பிள்ளையாக மக்கள் கொண்டாடினர்.
தனது ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கெட்டப்புகளில் தோன்றுவது, அதற்கு ஏற்றாற்போல், நடை, உடை, பாவனைகள் என அனைத்தையும் மாற்றுவதிலும் எம்.ஜி.ஆர். ஒரு கில்லாடி.
தாம் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் ஏழை எளியவர்களின் துயர் துடைக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிரச்சாரத்திற்கு செல்லாமலே வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர். இதுவே திரையிலும், அரசியலும் அவரது ஆளுமைக்கு சிறந்த சான்று.
வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்ற சொல் எம்ஜிஆர் வாழ்வில் உண்மையாகிப்போனது. எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் இன்றும் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாக திகழ்கிறது என்றால் அது பொய்யில்லை.
– உதுமான் அலி