கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகிலுள்ள தென்னம் பாளையம் பகுதியில் டேங்கர் லாரிகளில், அரசு நிறுவனங்களுக்கு செல்லும் ஆயில், டீசல், தார் மற்றும் பர்னஸ் ஆயிலை கூலிப்படையினர் மூலம் திருடிக்கொண்டு தண்ணீரைக் கலந்து அனுப்பும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், காவல் துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட நிலையில்.. ராஜகுரு என்கிற இளைஞரை சிங்காநல்லூர் பகுதியில் கூலிப்படையினர் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக விசாரித்தபோது… கோவை புறநகர் பகுதியான தென்னம் பாளையம் பகுதிகளில் பாலு, ஜஸ்டின் ஆகிய இருவரும் முத்தாரம்மன் டிரேடர்ஸ் என்கிற பெயரில் கழிவு ஆயில்ளை வைத்துக்கொள்ள அனுமதி பெற்று, அந்த அனுமதியின் பெயரில், சூலூர், கருமத்தம்பட்டி காவல் நிலையங்கள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் ஆசியுடன், நீலகிரி அரவங்காடு கார் ரைடு தொழிற்சாலை, சேலம் அனல்மின் நிலையம், சேலம் இரும்பு உருக்கு ஆலை போன்ற இடங்களுக்கு டேங்கர் லாரிகளில் செல்லும் பர்னஸ் ஆயில்களை தினசரி பல்லாயிரக்கணக்கான லிட்டர் ஆயிலை திருடிக்கொண்டு தண்ணீர், சோப்பு ஆயில், கழிவு ஆயிலை கலந்து அனுப்புகின்றனர். அவ்வப்போது காவல்துறையினர் சோதனை என்கிற பெயரில் செல்கின்ற போது.. தங்களிடம் உள்ள கழிவு ஆயில் அனுமதியைக் காண்பித்து தப்பித்துக் கொள்கின்றனர். இவர்கள் ஆயில் திருடுவது காவல்துறையினருக்கு நன்கு தெரியும். ஆனாலும் கிடைக்க வேண்டியது கிடைத்ததும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
இந்நிலையில்தான் ராஜகுரு என்கிற இளைஞரை சிங்காநல்லூர் பகுதியில் நான்குபேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் மயக்க நிலையில் கிடந்த ராஜகுருவை ஆம்புலன்சில் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் ராஜகுரு பேசுகையில்… சூலூர் அருகே இருகூர் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் உள்ளது. இங்கிருந்து கோவை மண்டலம் முழுவதும் உள்ள பங்குகளுக்கு பெட்ரோல் டீசல் தார் பர்னஸ் ஆயில் போன்றவை விநியோகம் செய்யப்படுகிறது. கிடங்கிலிருந்து வெளியே வரும் டேங்கர் லாரிகளில் பாலு என்பவர் தனது ஆட்களுடன் ஆயில் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இவர்மீது ஏற்கனவே ஆயில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது ஆயில் திருட்டுக்கு நான் இடையூறாக இருப்பதாகக் கூறி என்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் எனக் கூறினார்.
ஆயில் திருட்டு சம்பந்தமாக தகவல்களை வெளியில் கூறியதாக இளைஞரை கொலை செய்யும் நோக்கத்தோடு, ஓட ஓட விரட்டி, வெட்டிச் சாய்க்க தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தான்குளம் செந்தில் என்பவர் தன் அடியாட்களுடன் —- தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளதாம். தென் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்து வருகிறார். கூலிப்படையுடன் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தொழிலாக செய்து வருபவர். இவர் தென் மாவட்டத்தில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என்பதால், கோவையில் பத்திற்கும் மேற்பட்ட அடியாட்களுடன் பதுங்கி இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது கோவையில் கந்துவட்டி, மீட்டர் வட்டி தொழில் செய்வதோடு, ஆயில் திருட்டு போன்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று மாமுல் வசூலித்து வருகிறாராம்.
மேலும் தென்னம் பாளையம் திருட்டு ஆயில் கிடங்கில் ஒரு லிட்டர் ஆயிலுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் என நிர்ணயித்து, ஒரு நாளுக்கு இருபதாயிரம் ரூபாய் முதல் அறுபதாயிரம் ரூபாய் வரை வசூலித்து வருகிறாராம். அதனால்தான் தனக்கு வந்துகொண்டிருக்கும் வருமானம் நின்றுவிடுமோ என்கிற அச்சத்தில், தகவலை வெளியில் கூறியதாக ராஜகுரு என்பவரை தனது அண்ணன் மகன்களை வைத்து ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளார் செந்தில் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
தற்போது சிங்காநல்லூர் காவல்நிலையத்தில், தாக்குதல் நடத்த காரணமான பாலு என்கிற பாலசந்தர், ஜஸ்டின் ஆகிய இருவரைப் பிடித்து வைத்துள்ளதாகவும், தாக்குதல் நடத்திய கும்பலுக்கு ஆதரவாக சிங்காநல்லூர் காவல்நிலை உதவி ஆய்வாளர் ஒருவர், ராஜகுரு மற்றும் அவரது மனைவியிடம் சமாதானம் பேசி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. பொது இடத்தில் ஆயுதங்களுடன் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்காமல், ரவடி கும்பலுக்கு ஆதரவாக காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரே சமாதானம் பேசுவதுதான் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்கும் லட்சணமா ? வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆணையர் அலுவலகத்திற்கு இந்த தகவல்கள் தெரியப்படுத்திய பிறகு உடனடியாக இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விஷயத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி பவானஸ்வரி, கோவை சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் ஆகிய இருவரும் கடுமையான நடவடிக்கை எடுக்காத வரையில் இந்த ஆயில் திருட்டு கும்பலை ஒழிக்க முடியாது என்கிறார்கள் காவல்துறையில் பணியாற்றும் சில நேர்மையான காக்கிகள்.
-நந்து
செய்தியாளர்