டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு… ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா?
மாநில அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குரூப்-4 தேர்வு முறைகேட்டில், காவல்துறையில் பணியாற்றும் காவலர் இடைத்தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்தும், குரூப்-4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பிட்ட இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய, ஆடு மேய்க்கும் தொழிலாளி உள்ளிட்டோர் அதீத தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது. இதன்மூலம், டிஎன்பிஎஸ்சி.யின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலையில், இந்த புகார் குறித்து, சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. குருப்-4ல் மட்டுமின்றி, குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
6ஆவது நாளாக, விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் சிபிசிஐடி போலீசார், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றவர்கள் என இதுவரை 14 பேரை கைது செய்திருக்கின்றனர்.
ஆயுதப்படை காவலர் சித்தாண்டி தனது மனைவி, இரு தம்பிகள், தம்பி மனைவி என நான்கு பேருக்கு முறைகேட்டில் ஈடுபட்டு குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் சித்தாண்டியும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். அவரது சகோதரர் வேல் முருகன் என்பவர் காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சித்தாண்டியின் மொபைல் சிக்னல் மூலம் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் முயற்சித்து வருகின்றனர். ஆயுதப்படைக் காவலருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடில் ஈடுபட்டு நான்கு பேருக்கு எப்படி அரசுப் பணியை பெற்றுத்தர முடிந்தது என்று விசாரித்ததில் அவர் இதற்கு முன்னர் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஓட்டுநராக பல காலம் பணியாற்றியுள்ளார். அந்த அதிகாரி டிஜிபியாகவும் பதவி வகித்துள்ளார். அவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அவரது அதிகாரத்தை பயன்படுத்தியே சித்தாண்டி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டில் அந்த அதிகாரிக்கும் முக்கிய தொடர்பு இருக்கும் என்றும், இந்த நான்கு பேர் தவிர 200 பேருக்கு மேல் சித்தாண்டி ஐபிஎஸ் அதிகாரி துணையுடன் வேலை வாங்கிக்கொடுத்திருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகிறது. ஆனால் ஐபிஎஸ் அதிகாரி யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை
இதுகுறித்து, குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், சிபிசிஐடி அதிகாரிகளிடம் கேட்டபோது, குற்றம்சாட்டப்படும் குறிப்பிட்ட ஆண்டுகளில், தேர்ச்சி பெற்று, பணியில் உள்ளவர்களின் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி.யிடம் கேட்டிருப்பதாக தகவல் அளித்தனர்.
இதனிடையே குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றதாக கூறப்படும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த நபரும், தற்போது புகாருக்கு ஆளாகியுள்ள காவலரும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை வரைமுறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர அரசு ஆலோசித்து வருவதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒரு தேர்வு மையத்தில் நடந்த தவறுக்காக ஒட்டுமொத்த குரூப் 4 தேர்வுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மாற்றாக அடுத்த தரவரிசையில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக, வேல்முருகன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், காவல்துறையில் உள்ள பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டி என்பவரது வீட்டில், 4 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாநில அளவில் முதல் பத்து இடங்களை பிடித்திருப்பது தெரிய வந்தது. இதில் சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் முத்துப்பட்டணம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். தற்போது அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.