சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மாதவரம் அதிகாரிகளின் அலட்சியத்தால், புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு அம்பத்தூர் செல்லும் பிரதான புறவழிச்சாலையில், ஓம் சக்தி நகரில் உள்ள டீசல், ஆயில் பதுக்கி வைத்திருந்த தனியார் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சேமிப்பு கிடங்கு அந்தோணி என்பவருக்கு சொந்தமானது எனவும், அங்கு டீசல், ஆயில் போன்றவற்றை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் பழைய பிரிட்ஜ்கள் வாஷிங் மிஷின்கள் பழைய டிவிக்கள் உட்பட அட்டை பெட்டிகள் சுமார் 30 லட்சம் ரூபாயில் இருப்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சேமிப்பு கிடங்கிற்கு பின்புறம் உள்ள மைதானத்திலிருந்து வெண்புகை கிளம்பி அதிலிருந்து தீப்பொறி ஏற்பட்டு இந்த கிடங்கின் மேல் விழுந்ததில், டீசல், ஆயில் பேரலில் தீ பற்றி எறியத்தொடங்கி மறற பகுதிகளுக்கும் மளமளவென்று பரவியுள்ளது.
இதன் காரணமாக குடோனில் இருந்த பொருட்கள் வெடித்து தீப்பிழம்பை கக்கி பெறும் நெருப்பு ஜுவாலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் நெடுஞ்சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த செய்தி தெரிந்ததும் அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சேமிப்பு கிடங்கின் அருகேயுள்ள சேமிப்பு கிடங்கில் பழைய அட்டைப்பெட்டிகள்,பஞ்சு மெத்தைகள், மறுசுழற்சி செய்வதற்கான பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற பொருட்களை வைத்துள்ளனர். மேலும் கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் கார்களையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் தீ பரவியதால் பழுது பார்க்க நிறுத்தி வைத்திருந்த கார்கள், அதன் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ( குட்டி யானை ) உள்ளிட்ட வாகனங்கள் எறிந்து சாம்பலாகி உள்ளது.
சம்பவ இடத்திற்கு மாவட்ட அலுவலர் தென்னரசு மற்றும் உதவி அலுவலர் ராமதாஸ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் அம்பத்தூர், மாதவரம், வில்லிவாக்கம், வ.உ.சி நகர், கொளத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனத்துடன் வந்த 40 ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் -3-ல், 32 வது வார்டில் இந்த பகுதி உள்ளது. இது அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து, இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது ? கிடங்கில் பதுக்கி வைத்திருந்த டீசல், ஆயில் போன்ற எளிதில் தீ பற்றக் கூடிய திரவப் பொருட்கள் காரணமா ? வேறு ஏதாவது நாசவேலை காரணமாக இருக்குமோ என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து சம்பந்தமாக அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில்.. இந்த புழல் அம்பத்தூர் செல்லும் புறவழிச்சாலையில் ஏராளமான இடங்களை ஆக்கிரமித்து, மேல் வாடகைக்கு விட்டுள்ளனர். சேமிப்பு கிடங்குகள் வைத்திருக்கும் உரிமையாளர்களும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் முறையான அனுமதியைப் பெறுவதில்லை. அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு சேமிப்புக் கிடங்குகளை நடத்த அனுமதிக்கின்றனர். உரிமையாளர்களும் முறையான தற்காப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், வாகனங்களில் இருந்து பழைய ஆயில் பேரல்கள், டீசல் போன்ற எளிதில் தீ பற்றும் பொருட்களை சேமித்து வைப்பதும், விபத்து ஏற்படுவதும் இப்பகுதியில் தொடர்கதையாக உள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டலம் -3 மாதவரம் பகுதியில், சென்னை மாநகராட்சில் சேமிப்பு கிடங்குகள் நடத்த முறையான அனுமதி பெற்றிருக்கிறார்களா ? என துரிதமாக ஆய்வு செய்வதோடு, அனுமதி இல்லாமல் செயல்படும் சேமிப்பு கிடங்குகள் சம்பந்தமாக வந்துள்ள புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மண்டலம் -3 அலுவலகத்தில் அனுமதி பெறாமல் பல ஆண்டுகளாக செயல்படும் சேமிப்பு கிடங்குகள் குறித்து புகார்கள் கொடுக்கப்பட்டு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், புகார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.எஸ்
சென்னை செய்தியாளர்