திண்டுக்கல் அருகே மலைகளை உடைத்து கனிமவள கொள்ளை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை குன்றுகள் நிறைந்து காணப்படும் இடமாகும். இம்மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு வாய்ந்த அழகான இடங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஒட்டங்கரடு என்ற மலை குன்று உள்ளது.
ஒட்டன்சத்திரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பெரிய கரட்டுப்பட்டி , சின்ன கரட்டுப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களுக்கு நடுவில் உள்ள பல மலை குன்றுகளில் ஒட்டங்கரடு மலை குன்றும் ஒன்று.
கடந்த சில மாதங்களாக இந்த மலையின் பாறைகளை உடைத்து மலையின் அடிவாரத்தில் கிரஷர் மெஷின்கள் மூலமாக M SAND மணல், சிறிய வகையிலான கற்கள் என தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
மலையை உடைத்து வியாபார நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மர்ம கும்பல் யார் என அந்த பகுதியில் உள்ள சிலரிடம் விசாரணை செய்ததில்,
மலையிலுள்ள பாறைகளை உடைத்து விற்பனை செய்வது யார் என தெரியவில்லை. பல மாதங்களாகவே இந்த மாதிரியான வேலைகள் தான் இங்கே நடந்து வருகிறது. எந்த அதிகாரியும் இதுவரை இந்த பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை. ஒட்டங்கரடு மலையை சுற்றியுள்ள பல மலைகளுக்கு, இந்த மலை தான் பெரிய மலை, ஆனால் இந்த மலையை குடைந்து எடுக்கின்றனர். பகல் நேரத்தில் பாறைகளை குடைந்து எடுப்பதால் விவசாயம் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆடு மாடு மேய்க்கவும் பெரும் சிரமமாக உள்ளது.
இதேபோல் மலைகளை உடைத்து எடுப்பதால் பிற்காலத்துல பெரிய ஆபத்து ஏற்படும். அரசியல்வாதிகள் வியாபாரத்துக்காக இதுபோன்ற வேலைகளை சாதாரணமாக செய்து விட்டு போய் விடுகின்றனர். பிறகு பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் செயல்களை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது, அமைச்சரின் சொந்த தொகுதியில் கனிம வளம் திருடப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
டெண்டர்கள் மூலமாக பாறைகளை உடைக்க அனுமதி பெற்று, பெரும் மலைகளை உடைத்து கனிம வளங்களை முழுமையாக அழித்து வரும் கொள்ளையர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போதைய நிலைமை அனைத்து மாவட்டங்களிலும் கனிம வளங்களை சூரையாடுவதில் முக்கிய பங்கு வகித்துவரும் அரசியல் பிரமுகர்கள், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை குறிவைத்து கனிம வளங்களை சுரண்டிச் செல்லும் நபர்கள் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-சாதிக்பாட்ஷா.