மருந்து கடையில் மர்ம நபர்கள் 8 லட்சம் கைவரிசை ! போலீஸார் வலைவீச்சு !
புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டேரி அருகே விநாயகபுரம் கல்பாளயத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 43) என்பவருக்கு சொந்தமான செந்தில் மெடிக்கல் ஷாப் கடை உள்ளது. இங்கு அனைத்து மருந்து வகைகளும் இருப்பு வைத்து, சில்லறை விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். உரிமையாளர் செந்திலுக்கு உதவியாக அவருடைய சகோதரர் கற்பகவேல் கடையில் இருந்து வந்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இன்று காலை சுமார் 9 மணி அளவில் கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு பாதி திறந்த நிலையில் இருந்ததை கண்டு உரிமையாளர் செந்தில் அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் இருந்த 8 லட்சம் பணம் திருடு போயிருந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக புழல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த புழல் சரக உதவி ஆணையர் சாகாதவன், புழல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடனடியாக கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் போலீசாரின் ரோந்து பணி இருந்தும் இதுபோல் ஒரு குற்ற சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசிங் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.