வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் அவரது மகன் சரத்குமார் (வயது 39) ஏப்ரல்-30அன்று நண்பகல் ஒரு மணியளவில் செங்குன்றம் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஏழுபேர் அவரை வழி மறித்துள்ளனர்.
தன்னை கொலை செய்ய அரிவாளுடன் வருவதை கண்டு ரவுடி சரத்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார், ஆனாலும் மர்மநபர்கள் துரத்தி ஓடி தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் சரமாரியாக தலை, முகம், மார்பு ஆகிய பகுதிகளில் வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரது உடலைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். காலை வேளையில் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதியில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றிய தகவல் அறிந்த கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் மற்றும் உதவி ஆணையர்கள் சிவகுமார், சகாதேவன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதுபற்றி ராஜமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 23), யோகேஸ்வரன் (வயது 23), பெஞ்சமின் ( வயது 23), நந்தகுமார் ( வயது 22), சூளையைச் சேர்ந்த பிரசாத் ( வயது 23) ஆகிய ஐந்து பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசார் விசாரணையில்… வெட்டுபட்டு இறந்த சரத்குமார் பெரவள்ளூர் காவல் நிலைய பகுதியில் 2019 ல் ஜானகிராமன் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்ததால் முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி, கைது செய்யப்பட்ட ஐந்து நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து கொலை செய்ய பயண்படுத்திய ஆயுதங்களையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளார். கொலை நடந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.எஸ்
சென்னை செய்தியாளர்