நாகர்கோவிலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறுகிறது. இது, காவிரி ஆணையத்திற்கு எதிரானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே மரபு வழியாக இரு மாநிலங்களும் ஒத்துக்கொண்டால் மட்டுமே அணை கட்ட வேண்டும் என உள்ளது. ஆணையம் என்று வந்த பிறகு, கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டுவோம் எனக் கூறுவது தவறு. அதற்கு, மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது தமிழகத்திற்குச் செய்யும் துரோகம். இதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் போராட வேண்டும். ஜூன் மாதம் 12-ம் தேதி, தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், இதைப் பற்றிப் பேசாமல் மௌனம் சாதிக்கிறார்கள்.
கூடங்குளம் அணுஉலைக் கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது என்பதால், அதைக் கைவிட வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு கருத்துச் சொல்லக்கூட அரசு அனுமதி மறுத்து நெருக்கடி கொடுப்பது தவறானது. மாநில அரசு நீண்ட கால திட்டமிடுதல் இல்லாததால்தான், தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. முகிலன் காணாமல் போய் 100 நாள்களைக் கடந்துவிட்டது. அவர் இருக்கிறார் எனக் கூறுகிறார்கள், ஆனால், எங்கே என்பதுதான் தெரியவில்லை. அவரை மீண்டும் உயிரோடு கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரம், முகிலன் மாயமான விவகாரம், தமிழ் ஈழ விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டங்களில், சமுதாயத்தில் அமைதி குறைவை ஏற்படுத்துதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசியதற்காக, இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய முடியாது எனக் கூறி, திருமுருகன் காந்திக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், விசாரணைக்குத் தேவைப்படும் போது போலீசார் முன் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், திருமுருகன் காந்தியின் பேச்சு, கண்டிக்கத்தக்கது எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிரான மக்கள்விரோதப் போக்கில் ஈடுபட்டால், அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுவோம் என்று திரைப்பட இயக்குநர் கௌதமன் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, தங்கள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிம்போது, ‘‘தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துவருகிறது. மனிதர்கள் மட்டுமின்றி ஆடுமாடுகள் மற்றும் வனவிலங்குகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன. தமிழக அரசு இதனைப் பற்றி கவலைப்படாமல் நாடகம் போடுவதிலேயே குறியாக உள்ளது.
ஒற்றைத் தலைமையில் என்ற திசை திருப்பும் நாடகம் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மூலமாக அரங்கேற்றி, அதற்கு கூட்டம் நடத்துவது போல தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் படியான நாடகத்தை ஏன் நடத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் காவரி தண்ணீர் திறக்கப்படாததால், தஞ்சை டெல்டா மாவட்ட விவசாயிகளின் குருவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.
காவரி மேலாண்மை ஆணையம் அமைய நாங்கள் தான் காரணம் என்று கூறிக்கொள்ளும் தமிழக அரசு, அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் இருப்பது ஏன்?
ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதற்காக போராடும் விவசாயிகளை அடக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வினால் மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியே தமிழக விவசாயிகள், மாணவர்கள் மற்றும் மீனவர்கள் அழிக்கப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சி அல்ல.
இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கை இனி நாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம். சகித்துக்கொண்டு இருக்கமாட்டோம். இதற்கு ஓரு முடிவு கட்டுவோம். பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பார்வையிட்டோம். இந்த மாவட்டம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. சிமெண்ட் ஆலைகளுக்காக தோண்டப்பட்ட குவாரிகள் மூடப்படமால் மரணக் குழிகளாக உள்ளன.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் செயல்படாத நிர்வாகமாக லஞ்சத்தில் திளைத்துள்ளது. கொள்ளையடிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள இருப்புப்பாதைத் திட்டம், சிறப்பு பொருளாதாரமண்டலம், அரசு மருத்துவக்கல்லூரி, சின்ன வெங்காய விவசாயிகளின் மேம்பாடு போன்ற கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்’’ என்றார் கௌதமன்.