தமிழகம்

வடமதுரை காவல்நிலையமும் கிடப்பில் கிடக்கும் புகார்களும்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வேடசந்தூர் தொகுதியில் மிகப்பெரிய ஒன்றியமாக கருதப்படும் வடமதுரை பதினைந்து ஊராட்சிகளை உள்ளடக்கிய வளர்ந்துவரும் நகர் பகுதியாகும். பல்வேறு நூற்பாலைகளும் தொழிற்சாலைகளும் பெருகிவிட்டததால் வெளிமாநிலத்தவர்களின் நடமாட்டமும், தங்கி வேலைபார்க்கும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த புதிய முகங்களின் எண்ணிக்கையும் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் அதிக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. வடமதுரை பகுதிகளில் அவ்வப்போது கொலை கொள்ளை வழிப்பறிகளுக்கும் பஞ்சமிருக்காது. ஒரு குற்றச்செயல் நடைபெறுவதற்கு முன்பாகவே அதை தடுக்கவேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு. ஒரு சட்டவிரோதச் செயல் நடைபெறுகிறது அதை தடுத்து உரியவர்களை கைது செய்யவேண்டும் என்று வரும் தகவல் மீது உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பதிலாக அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதோடு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு போன் பண்ணி ‘இங்கு புகார் வருது கொஞ்சம் பாத்துச் செய்யுங்க’ என்று சொல்லி அவர்களிடம் ‘கறக்கும்’ வேலையை மட்டும் கனகச்சிதமாக செய்வதாக இப்பகுதி பொதுமக்கள் நம்மிடையே பெரிதாய் குறைபட்டுக்கொண்டனர்.
மேலும் கொடுக்கப்படும் எந்த புகாருக்கும் உடனடி நடவடிக்கை எப்போதும் எடுக்கப்பட்டதேயில்லை என்று சில சமூக ஆர்வலர்கள் பொங்குகின்றனர். ‘இன்று வா, நாளை வா, நாளை மறுநாள் வா, இன்ஸ்பெக்டர் இல்லை, எஸ்ஐ கோர்ட்டுக்கு போயிருக்கிறார் சாயந்திரம் வா என்று இப்படியாக எப்படியும் பத்துநாளைக்கும் மேலாக இழுத்தடித்து பின்பு எதிரி ஆள் வரல, தலை மறைவாயிட்டான், என்னைக்காச்சும் சிக்குவான் என்று சொல்லி புகார்தாரரை அலைகழித்து ஏண்டா புகார்கொடுத்தோம் என்று மனுதாரரே நொந்து, தலையை பிச்சுக்காத குறையா நடவடிக்கையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஆளவிட்டாப் போதும்சாமி என்று ஓடிவிடுவதுதான் தொடர்கதையாக இருந்துவருகிறது.
டாஸ்மாக்கில் கமிஷன், சட்டவிரோத சூதாட்ட கிளப்புகளில் கமிஷன், மணல் திருட்டில் கமிஷன், லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் கமிஷன், வாகன சோதனை என்றபெயரில் கட்டாய வசூல், இன்னும்பல சமூக விரோதச் செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு லஞ்சம் வாங்குவது என்ற நிலையில்தான் வடமதுரை காவல்நிலையத்தின் செயல்பாடுகள் இருக்கிறது. இது கடந்து மக்கள் நலனில் அக்கறையோ, பாதுகாப்பு விசயங்களில் கவனமோ செலுத்துவதில்லை. சாமனியர்கள் கொடுக்கும் புகார்கள் குப்பைத்தொட்டிக்கு போகாத குறைதான். சிலவேலைகளில் புகார் கொடுப்பவர்களே கடுமையாய் மிரட்டப்படும் சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. இங்கு குற்றம் குறைகளுக்கெல்லாம் வேலையில்லை. பணம் இருந்தால் மட்டும்தான் புகார்கள் பேசுகின்றன.
புகார் கொடுத்தால் அதற்கான மனுரசீது கொடுக்கப்படுவதில்லை. இதனாலேயே நடவடிக்கை இல்லாவிட்டாலும் புகார் கொடுத்ததற்கான சான்றாவது வேண்டுமே என்ற நோக்கில் ஆன்லைனில் புகார் செய்தால் அதுவும் இந்த காவல்நிலையத்தில் கண்டுகொள்ளப்படுவதேயில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. புதிதாய் துடிப்போடும் நேர்மையோடும் இந்த காவல்நிலையத்தில் பணிக்குவரும் எஸ்ஐகள் பலர் ஆறே மாதத்தில் எல்லா தவறுகளையும் கற்றுக்கொண்டு பணம் கறக்கத் தொடங்கி விடுகின்றனர். இல்லை, மக்களிடம் பத்துப்பைசா வாங்காமல் நான் நேர்மையாகத்தான் இருப்பேன் என்பவர்களை இங்கு நீண்டகாலம் பணியில் இருக்கும் காவலர்கள் பணம் வாங்க நிர்பந்திப்பதாகவும், எங்கள் பொழப்பில் கை வைக்கவா நீ இங்கு வந்து சேர்ந்த என்று ஏசுவதாகவும் சொல்லப்படுவதுண்டு. அதையும் மீறி கொள்கையில் உறுதியாக இருந்தால் இங்கு நீண்டநாட்கள் பணியில் நிலைக்கமுடிவதில்லை என்பதே கடந்தகால வரலாறுகளாக இருக்கின்றன.
அப்படி இங்கு என்னதான் நடக்கிறது? என்ன குறை என்பதை தெரிந்துகொள்ள இந்த காவல்நிலையத்தின் நமக்கு வேண்டப்பட்ட போலீஸ் நண்பரொருவரிடம் பேசினோம். “ தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காவல்நிலையமென்றால் அது இந்த வடமதுரை காவல்நிலையம்தான். 235 கிராமங்களை உள்ளடக்கியது. பெரும்பாலும் எல்லாமும் மலை கிராமங்கள். வெவ்வேறு விநோதமான சாதியப் பழக்கவழக்கங்களை கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி. கல்வியறிவில் முழுமை என்று சொல்லமுடியாதபடிக்கு கரடுமுரடான அணுகுமுறைகளை கொண்ட வெள்ளந்தியான மனநிலை கொண்ட மக்கள். வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த காவலர்களின் எண்ணிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா இப்போது வெறும் பத்துப் பேருக்குள் சுழல்கிறது. 30 பேரில் 15 பேர் டிஎஸ்பி ஆபீஸ், எஸ்பி ஆபீஸ், நீதிமன்ற விசயங்களுக்காக எப்போதும் ஸ்டேசனில் இருக்க முடியாத நிலை. 5 பேர் வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலாகி போய்விட்டனர். இருக்கும் 10 பேரில் 4 பேர் பெண்கள். நான்கு பேரையாவது அனுப்ப வேண்டிய ஒரு பிரச்சனைக்கு ஒரு காவலரை மட்டுமே அனுப்பவேண்டிய நிலையிருப்பதால் புகார்மீதான நடவடிக்கைகளில் மந்தநிலை நீடிப்பது உண்மைதான். காவலர்கள் பற்றாக்குறையை வைத்துக்கொண்டு இந்த நிலையை சரிசெய்வது அவ்வளவு எளிதல்ல. தற்போது புதிதாய் வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அவர்களின் ஆளுமை மிகுந்த நடவடிக்கைகளால் ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக்கொண்டிருக்கிறோம், எல்லாவற்றையும் இனிதான் முழுவதுமாக சரிசெய்ய வேண்டும் என்றார் கவலையோடு. எது எப்படியோ மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும், புகார்களின் மேல் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே நாற்காலி செய்தியின் அன்பான வேண்டுகோள். பொறுத்திருந்து பார்ப்போம்!

  • சுப்பிரமணியன் (-கவி)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button