தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக் குழு அமைத்து, அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 15-ஆம் உத்தரவு பிறப்பித்தது.
அதில், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மே 28-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், அன்றைய தினத்திலிருந்து 3 வாரங்களுக்குள் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. ஜனவரி 21-ஆம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல, ஆலையைத் திறக்க அனுமதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் இணைக்கப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
அதில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிற விவகாரங்கள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் முறையீடு செய்யவும் உத்தரவிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டூம் திறக்க தேசிய பசுமை திர்ப்பாயம் உத்தரவுவால் தூத்துக்குடி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை திர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையிடு செய்து சட்ட ரீதியான போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை செய்து தேசிய பசுமை திர்ப்பாய உத்தரவும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .மேலும் இந்த தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் உயிரிழந்த தூத்துக்குடியின் மண்ணிண் மைந்தர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.
தூத்துக்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.