பழனி நகராட்சியில் பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு, அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில், வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் காந்தி சாலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் தினசரி மார்க்கெட் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் பாதுகாப்பற்ற முறையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடைபெறுவதாக அப்பகுதியினர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில்… காந்தி சாலையில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் தூண்கள் அமைப்பதற்காக, குழிகள் தோண்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளும் போது, பாதுகாப்பு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல், பாறைகளை உடைப்பதற்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி வெடிவைத்து தகர்க்கின்றனர். இப்பகுதியில் வழிபாட்டு தலங்கள், வீடுகள், கடைகள் அமைந்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
பகல் நேரங்களில் பொதுமக்கள் அதிகமானோர் வந்து செல்லும் இப்பகுதியில், முன் அறிவிப்புகள் எதுவுமின்றி பாறைகளை உடைப்பதற்காக ஆபத்தான வெடிமருந்துகளை பயன்படுத்தி, வெடிவைத்து தகர்க்கின்றனர். இதனால் பலத்த சத்தத்துடன் பாறை கற்கள் வெடித்து சிதறுவதால் அப்பகுதியினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் நடுத்தர மக்கள் அதிக அளவில் வசித்து வருவதால், பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகளாகவே உள்ளது. இதனால் தங்கள் வீடுகள், கடைகளுக்கு பாதிப்புகள் வரலாம், சுவர்களில் விரிசல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இதுபோன்ற ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் போது, அப்பகுதியினருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னரே பணிகளைத் தொடர வேண்டும். இதுசம்பந்தமாக பழனி நகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.சாதிக்பாட்ஷா
– சாதிக்பாட்ஷா