திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது என சபாநாயகர் அறிவிக்காதது ஏன் ?.!
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார். உடனடியாக அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த 24 மணிநேரத்தில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். தேர்தல் ஆணையமும் உடனடியாக விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அந்தத் தொகுதிக்கு பாராளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதேபோல் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி தானாக காலியாகி விட்டது. பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டு இரண்டரை மாதங்களாகியும், சட்டப்பேரவை தலைவர், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதாமல் இருப்பதற்கு என்ன காரணம் ?
பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியானதால்தான் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரது இருக்கையை இன்னும் அப்படியே தான் வைத்துள்ளார் பேரவைத் தலைவர். நாடாளுமன்றத் தேர்தலோடு விளவங்கோடு, திருக்கோவிலூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். மாற்று கட்சியினருக்கு ஒரு நீதி, தனது கட்சினருக்கு ஒரு நீதி என்றில்லாமல் அனைவருக்கும் ஒரே நீதி என்பதை நிரூபிக்கும் வகையில் பேரவைத் தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.