போதைப்பொருள் கடத்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் !
சமீப காலங்களாக சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பவர்கள், உல்லாசமாக வாழ்க்கையை அனுபவிக்க தேர்ந்தெடுப்பது சினிமாத்துறை என்பது அனைவரும் அறிந்ததே. உதாரணத்திற்கு அரசியல்வாதிகளுக்கு காரியங்கள் செய்து தருவதாக பலகோடி பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு டெல்லி சிறையில் இருப்பவர், விலையுயர்ந்த கார் மற்றும் பரிசுப் பொருட்களை ஒரு நடிகைக்கு வழங்கியது சம்பந்தமாக அந்த நடிகையிடம் விசாரணை நடந்து வருகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் காரில் சென்று ஆடுகளை திருடி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சொந்தப்படம் எடுத்ததும் வெளியானது.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தியதாக. ‘மங்கை” படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி, தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு டெல்லியை மையமாக வைத்து சர்வதேச நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, தெற்கு டெல்லி பகுதியில் 1700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்றுபேரை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப்பொருட்களில் குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு செல்லும் தேங்காய் பொடி மற்றும் இதர பொருட்களில் போதைப்பொருள் கலந்து கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, தீவிர சோதனை நடத்தியதில் ஜூடோ பெடரிக் போதைப்பொருள் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், நடிகர் மைதீன் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஜாபர் சாதிக் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதன் பின்னணியில் யார்யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.