வெளிமாநிலத்தினர் அனுமதி ! உள்ளூர் வியாபாரிகளை விரட்டி அடிக்கும் பழனி கோவில் நிர்வாகம் !.?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி புகழ் பெற்ற ஆன்மிக ஸ்தலமாகும். இங்கு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை ஐந்து மாதங்கள் முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வந்து செல்கின்றனர். பழனி மலை அடிவாரத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ளூர் வியாபாரிகள் தற்காலிகமாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வதால் கூட்ட நெரிசலை தடுக்க மலையை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக கடைகளை அமைக்க கூடாது எனவும் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை கோவில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றியது.
பழனி அடிவாரத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் யாரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வழி நெடுக நின்று பொருட்களை விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்திய நிலையில், மலை அடிவாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் யாரும் வியாபாரம் செய்ய வழி இல்லாமல் போய்விட்டது. பழனி மலைக்கோவிலில் தனியார் காவலர்கள் உள்ளூர் வியாபாரிகளை அடிவார இடத்தை விட்டு துரத்திவிட்டு, வெளிமாநில வியாபாரிகளை சுதந்திரமாக வியாபாரம் செய்ய அனுமதிப்பதால், கோவில் நிர்வாகிகளின் துணையோடு தனியார் காவலர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளிமாநில வியாபாரிகளை அனுமதிக்கிறார்கள் என உள்ளூர் வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் ஒரு வருடத்தில் ஐந்து மாதம்தான் பிழைப்புக்கு வழி இருக்கிறது. அதை நம்பித்தான் பத்து வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்து பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மலை அடிவாரத்தில் ஒரு நாள் முழுவதும் நின்று வியாபாரம் செய்தால்தான் கடனை அடைக்க முடியும். இப்படியே போனால் இந்த கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை இதெல்லாம் அந்த பழனி முருகனுக்கே வெளிச்சம் என்பதாக புலம்பி தவிக்கின்றனர். பழனி கோவில் நிர்வாகத்தின் பெயரில் நடக்கும் தவறுகளை சரிசெய்ய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சாதிக்பாட்ஷா