திருப்பூரில் ஒப்பந்த தொழிலாளர்களின் “தாராவி” குடியிருப்பு !
திருப்பூர் என்றாலே பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் டாலர் சிட்டி என அன்போடு அழைக்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநராட்சி பகுதிக்குட்பட்ட 60 வார்டுகள் அமைந்துள்ளது. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அன்றாட அடிப்படை தேவைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது. மக்களின் அன்றாட தேவைகளான மின்சாரம், குடிநீர், தரமான சாலை, சாக்கடை வசதிகள் ஆகியவற்றை பராமரித்து வருகின்றனர். இதனிடையே அன்றாடம் பொதுமக்களால் கொட்டப்படும் குப்பைகளை அள்ள தனியார் வசம் டெண்டர் விடப்பட்டு அவர்களே ஒப்பந்த துப்புறவு தொழிலாளர்களை நியமித்து குப்பை அள்ளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்பணிகளுக்காக தனியார் ஒப்பந்த நிறுவனங்களால் நியமிக்கப்படும் தொழிலாளர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்நிலையில் 3 வது மண்டலத்திற்குட்பட்ட கோவில்வழி பகுதியில் உள்ள அரசுப்புறம்போக்கு நிலத்தில் வடமாநில ஒப்பந்த துப்புறவு தொழிலாளர்கள் குடும்பதினருடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்தில் பிளஃஸ் துணிகளை கொண்டு மறைக்கப்பட்ட குடிசைகள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் குடும்பங்கள் சுகாதாரமற்ற முறையில் நெருக்கமாக குடிசை அமைத்து பாதுகாப்பற்ற சூழலில் தங்கியுள்ளனர். வெட்ட வெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பது, போதிய சுகாதரமில்லாத கழிப்பிடம், குளியலறை என அடிப்படை வசதியின்றி வடமாநில தொழிலாளர்கள் வாழ்ந்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டும் நிலவுகிறது. எனவே திருப்பூரில் வேலை செய்து தங்களின் வாழ்வாதாரம் உயரும் என்கிற லட்சியத்தோடு கிடைத்த வேலையை செய்து உழைக்கும் எண்ணம் கொண்ட தொழிலாளிகளை தாராவி போன்ற இடத்த்தில் தங்க வைத்து அழகு பார்ப்பது நியாயமா? என்கிற கேள்வி எழுகிறது.
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க துப்புறவு தொழிலை செய்துவரும் வடமாநில தொழிலாளர்களின் எதிர்காலம் ஒளிமயமாக திகழ மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தலையிட்டு வடமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.