ஊழல் செய்த ஊராட்சி செயலாளருக்கு துணை போகும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான நூறுநாள் வேலைத்திட்டத்தில் 9,78,420/- ரூபாய் ஊழல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆய்வில் முறைகேடு செய்ததை உறுதி செய்தது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்த தொகையை குறிப்பிட்ட நாட்களுக்குள் அரசு வங்கி கணக்கில் திரும்ப செலுத்த உத்தரவு பிறப்பித்தது. முறைகேடு செய்த 9,78,420/- ரூபாய் தொகையை ஊராட்சிமன்ற தலைவர் 25% சதவிகிதம் , ஊராட்சி செயலர் ஏழுமலை 50% சதவிகிதம் , மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் 25% சதவிகிதம் திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது வரை மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் நிதி திரும்ப அரசு வங்கி கணக்கில் செலுத்தாமல் காலத்தை கடத்தும் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஏழுமலை , பணித்தள பொறுப்பாளர்கள் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.? ஆயிரம் ரூபாய் திருடும் திருடனுக்கு ஒரு சட்டம் , லட்சக்கணக்கான அரசு பணத்தை முறைகேடாக திருடும் அரசு பணியாளர்களுக்கு ஒரு சட்டமா.? பாப்பம்பட்டி ஊராட்சியில் செயலராக பணியாற்றி வந்த ஏழுமலை நூறுநாள் வேலைத்திட்டத்தில் செய்த ஊழலை நிரூபித்தும் அவரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்யாமல் பணியிட மாற்றம் செய்திருப்பது தண்டனையாக ஏற்றுக்கொள்ள முடியாது என அப்பகுதியினர் வெகுண்டெழுந்துள்ளனர்.
மேலும் அதே ஊராட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் எத்தனை உள்ளன என்பதை கணக்கெடுத்து தர கேட்டுள்ளது. வட்டார வளர்ச்சி நிர்வாகம் சர்வே எடுக்கும் பணிக்கு சென்ற ஊராட்சி செயலர் ஏழுமலை ஒரு வீட்டிற்கு தலா 2000 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்று கொண்ட பின்னரே குடிசை வீடுகளை கணக்கில் சேர்த்துள்ளார். லஞ்சமாக பணம் கொடுக்க மறுப்பவர்களின் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை கணக்கில் சேர்க்காமல் சேர்த்தவிட்டதாக பொய்யான தகவல்களை கூறியுள்ளார்.
தொடர் ஊழல்களை செய்து வந்த ஊராட்சி செயலர் ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்யாமல், மிகப்பெரிய தண்டனையான இடமாற்றம் என்னும் தண்டனை வழங்கி தற்போது பச்சிளநாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். தவறு செய்தால் இடம் மாற்றம் தானே செய்வார்கள் வேறு என்ன செய்ய போகிறார்கள் என்கிற மிதப்பில் இருக்கிறார் ஏழுமலை. இதே தவறுகளை மற்ற ஊராட்சிகளிலுள்ள செயலர்கள் ஊழல் செய்ய ஆரம்பித்தால் அரசு நிர்வாகம் கேள்விக்குறிக்கு ஆளாகும் என்பதை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி சற்று சிந்திக்க வேண்டும்.
ஊழல் செய்த ஊராட்சி செயலாளர் ஏழுமலை மீது நடவடிக்கை எடுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி போராட்டம் செய்ய சிலரைத் தூண்டிவிடும் வேலையில் ஈடுபட்டுள்ளார் ஏழுமலை என்கின்றனர்.
தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளால் குற்றம் சாட்டப்படும் ஊராட்சி செயலர் ஏழுமலையை கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் பணியிடை நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும் என்கின்றனர் அப்பகுதியினர். நடவடிக்கை எடுக்கப்படுமா ? காத்திருப்போம்….
-சாதிக்பாட்ஷா