பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் !
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான மணிகண்டன் பாரதீய ஜனதா கட்சியில் இணைய ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவினர் பேசி வருகிறார்கள்.
இதுசம்பந்தமாக இராமநாதபுரம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விசாரித்தபோது… நீண்ட நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிர்வாகிகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். மாவட்டச் செயலாளர் கட்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போதெல்லாம் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு பிரச்சினை செய்வது, தலைமையில் புகார் கொடுக்க வைப்பது, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் பேசுவது என்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் இராமநாதபுரத்தில் போட்டியிட்டபோது, தொகுதி பொறுப்பாளராக மணிகண்டன் தான் செயல்பட்டார். அப்போது நயினார் நாகேந்திரனுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டார். இவர் அமைச்சராக இருந்த போது சக அமைச்சராக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னாளில் அவரே கட்சிக்கு தலைமை ஏற்றதும் அனைத்து அமைச்சர்களும் பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டாலும், மணிகண்டன் அவருடன் மோதல் போக்கையே கடைப்பிடித்தார். அதனால்தான் பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் மணிகண்டனை மட்டும் அமைச்சரவையிலிருந்து விடுவித்தார்.
பின்னர் ஓ. பன்னீர் செல்வத்திடம் சிலகாலம் சமுதாய பாசத்தைக் காட்டி நெருக்கமாக இருந்து வந்தார். பின்னர் சிறைக்குச் சென்று வந்தபிறகு சில நாட்கள் அமைதியாக இருந்து வந்தார். பழனிச்சாமி தற்போது அமைப்பு ரீதியாக இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நிர்வாகிகளை நியமித்து வருகிறார். மணிகண்டன் இராமநாதபுரம், திருவாடானை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மூலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறாராம். இவருடன் அமைச்சரவையில் இருந்தவர்கள் எல்லோரும் தலைமை நிர்வாகிகளாகவும், மாவட்டச் செயலாளராகவும் கோலோச்சும் வேலையில், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்து இராமநாதபுரம் அதிமுகவை நிர்வகித்த மணிகண்டனின் நிலைமை இவ்வளவு மோசமாக ஆனதற்கு காரணம் அவரது செயல்பாடுகள் தான் என்கிறார்கள்.
மேலும் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்து இராமநாதபுரம் தொகுதியை கேட்டுப் பெறலாம் என்கிற முயற்சியையும் மேற்கொண்டு வருகிறாராம்.