கிடா சண்டை தகராறு ! சேங்கை மாறனுக்கு நேர்ந்த கொடூரம் .?.! “வட்டார வழக்கு” திரைவிமர்சனம்
மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், கந்தசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், சக்தி ஃபிலிம் பேக்டரி சத்திவேலன் வெளியீட்டில், சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வட்டார வழக்கு”.
கதைப்படி… மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகேயுள்ள தோடனேரி கிராமத்தில் வசிக்கும் சேங்கை மாறன் ( சந்தோஷ் நம்பிராஜன் ) குடும்பத்தினருக்கும், அவரது பங்காளி குடும்பத்திற்கும் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த வகையில் நீண்ட காலமாக பிரச்சினை நடந்து வருகிறது. சேங்கை மாறன் ஊரில் நடக்கும் விஷேசங்களில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று ஊரின் பெருமையை நிலைநாட்ட, அவரை பழிவாங்கும் எண்ணத்தோடு பகையாளிகள் அவரை பின்தொடர்கிறார்கள். ஒருகட்டத்தில் அவரது சித்தப்பாவை கொலை செய்ததோடு, அவரது மகனின் கையையும் வெட்டிவிட்டு சிறை செல்கிறான் சேங்கை மாறன்.
இதற்கிடையில் தாய் இல்லாமல், நோய்வாய்ப்பட்ட தந்தையின் துணையோடு வசித்துவரும் தொட்டிச்சி ( ரவீனா ரவி ) மீது சேங்கை மாறன் காதல் வலை வீச, இருவரும் ஒருவரையொருவர் சொல்லாமலே காதலிக்கிறார்கள். கதிர் அறுவடை நேரத்தில் தொட்டிச்சி ஒரு விபத்தில் சிக்க, உடனிருந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள். பின்னர் தொட்டிச்சி திடீரென காணாமல் போகிறார். சேங்கை மாறனுக்கு நடந்தவை எதுவும் தெரியாததால் தொட்டிச்சியை காண்பதற்காக தேடி அலைகிறான்.
சேங்கை மாறனை பழி தீர்க்க அவரது பகையாளிகள் தீட்டிய சதித்திட்டத்தில் சேங்கை மாறன் சிக்கினாரா ? சேங்கை மாறன், தொட்டிச்சி காதல் என்னானது என்பது மீதிக்கதை…
நீண்ட காலத்திற்குப் பிறகு கிராமத்தின் மண்வாசனை மாறாமல் ஒரு படைப்பை கொடுத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள். சேங்கை மாறன், தொட்டிச்சி கதாப்பாத்திரமாகவே சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.