அத்துமீறுகிறதா காவல்துறை..!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனாவசியமாக ஊர் சுற்றி போலீசிடம் வாகனத்தை பறிகொடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி அருகே வாகனத்தை பறிகொடுத்ததால் ஆவேசமான பெண் ஒருவர் போலீஸ் உடன் வாக்குவாதம் செய்ய, போலீசாரும் பக்குவமின்றி பதிலுக்கு பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறிவிடாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி அத்தியாவசியம் தவிர்த்து ஏதாவது ஒரு காரணத்துடன் வீதியில் வாகனங்களில் சுற்றுவோரின் வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நெல்லையில் கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு இன்றி தனது மகனை கராத்தே பயிற்சிக்கு அழைத்துச் சென்றவரின் வாகனம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
தடையை மீறி இயக்கப்பட்ட ஆட்டோ ஒன்றில் ஐந்து நபர்கள் கும்பலாக வருவதைக் கண்ட காவல்துறையினர் அவர்களை எச்சரித்ததோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 22 நாட்களில்தடையுத்தரவை மீறி நெல்லை மாவட்டத்தில் வாகனங்களை இயக்கியதாக 1272 வழக்குகள் பதிவு செய்யபட்டு873 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. நெல்லை மாநகரில் 757 வழக்குகள் பதிவுசெய்யபட்டு473 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் தடையை மீறி தாயுடன் காய்கறி வாங்க இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை எச்சரித்த காவல்துறையினர், அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் ஆவேசமாகி போலீசாரை வசைபாட, அங்கு குழாயடி வாக்குவாதம் அரங்கேறியது.
வாகனத்தை பறிகொடுத்த ஆத்திரத்தில் அந்த இளம்பெண் உணர்ச்சி வசப்பட்டு போலீசாரை கேவலமாக பேச, வாகனத்தை பறித்துக் கொண்ட போலீசாரும் பதிலுக்கு ரொம்ப கேவலமாக பேசியதால் அந்த பெண்ணின் வயதான தாய் அதிர்ச்சி அடைந்தார்.
தனி நபர் இடைவெளியை பின்பற்றும் விதமாக, வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே கடைவீதிக்கு வரவேண்டும் என்ற காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்காமல் வயதான தாயையும் தன்னுடன் வாகனத்தில் அழைத்து வந்தது அந்த பெண்ணின் தவறு. பக்குவமில்லாமல் அந்த பெண் வாக்குவாதம் செய்தார் என்பதற்காக, பெற்ற தாயின் முன்பு கேட்கக் கூடாத கேள்வியை எல்லாம் தெருவில் வைத்து கேட்ட போலீசார், தங்களுக்கும் பக்குவமில்லை என்று காட்டிக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
வீட்டுக்குள் அடங்கி இருங்கள், அதைவிடுத்து அத்தியாவசியமின்றி வாகனத்துடன் வீதிக்கு வந்தால் வீட்டுக்கு புலம்பியபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளன இந்த சம்பவங்கள்..!
மாஸ்க் இல்லா வியாபாரிமாஸ் காட்டிய எஸ்.ஐ..! லத்தியால் அடித்ததால் சர்ச்சை
தூத்துக்குடியில், தரமான மாஸ்க் அணியாமல் கைக்குட்டையை கட்டிக்கொண்டு வியாபாரம் செய்து வந்ததாக கூறி வியாபாரியை பிடித்து உதவி ஆய்வாளர் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் காய்கறிக் கடை நடத்திவருபவர் அதிமுக முன்னாள் கவுன்சிலரான பெரியசாமி. அரசு அனுமதித்த நேரத்தில் இவர் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த உதவி காவல் ஆய்வாளர் சுந்தரம் என்பவர், கடையில் கர்சீப் மட்டும் முகத்தில் கட்டிக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெரியசாமியை அழைத்து ஏன் தரமான மாஸ்க் அணியவில்லை என்று கேட்டதாக கூறப்படுகின்றது.
அதற்கு பெரியசாமி தான் துணிகட்டியிருப்பது கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்க, ஆத்திரம் அடைந்த உதவி காவல் ஆய்வாளர் சுந்தரம் லத்தியால் வியாபாரியை ஓங்கி அடித்ததோடு, வாகனத்தில் இருந்து இறங்கி கடை வரை அடித்துக் கொண்டே பின்தொடர்ந்ததாகவும், கடையை இழுத்து மூடியதுடன் மாஸ்க் அணியவில்லை என்று கூறி அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர், காவல் துணை கண்காணிப்பாளரிடம் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வியாபாரி பெரியசாமியை வழக்கு ஏதும் பதியாமல் விடுவித்ததாக கூறப்படுகின்றது. எஸ்.ஐ தாக்கியதில் இடது கையில் காயம் ஏற்பட்டதாக கூறும் பெரியசாமி, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுப்பு இல்லாமல், இடைவிடாத பணியால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், எதிர்த்து பேசிய வியாபாரியை தாக்கியதாக விளக்கம் அளித்தார் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம்.
ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் விடுப்பு எடுக்காமலும், வார விடுமுறை இன்றியும், மனைவி குழந்தைகளை பிரிந்து, வீட்டில் நிம்மதியாக உறங்க இயலாமல் இரவு பகல் என்று கால நேரமின்றி பணிசெய்யும் ஆயிரக்கணக்கான காவல்துறையினருக்கும் பணிச்சுமையும், மன அழுத்தமும், நிச்சயம் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் வியாபாரியை அழைத்து மாஸ்க் அணிய சொல்லி அறிவுறுத்தி செல்வதை விட்டு, அடித்து உதைப்பது எப்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சாமானிய மக்களிடம் கண்ணியத்துடனும், பணியில் கட்டுப்பாட்டுடனும் காவல்துறையினர் கடமை தவறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்..!
சீட்டாடி சிக்கியதால்சிதைக்கப்பட்ட மைனர் .! முதுகு தோல் உரிந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் அருகே சீட்டாடிக் கொண்டிருந்த கும்பலை விரட்டிச் சென்ற உதவி ஆய்வாளர் ஒருவர்,கையில் சிக்கிய உள்ளூர் நபர் ஒருவரை அடித்து அழைத்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செல்வராகவன்.
மிடுக்கான உடலமைப்புடன் தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டுமென்று எப்போதும் பரபரப்பாக வலம் வரும் செல்வராகவனை அப்பகுதியினர் சிங்கம் என்று அழைப்பதால் குற்றம் செய்து சிக்குபவர்களை ரோட்டில் போட்டு புரட்டி எடுப்பது இவரது வழக்கம்.
இந்தநிலையில் ஊரடங்குகாரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செல்வராகவன், தொட்ட பேளூர் கிராமத்தில் பணம்வைத்து சீட்டாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு அதிரடியாக களம் இறங்கினார்.
செல்வராகவனை பார்த்து அனைவரும் சிதறி ஓடிவிட, ஓட்டபந்தயத்தில் வெள்ளை சட்டை போட்ட உள்ளூர் மைனர் மாதேஷ் என்பவர் மட்டும் சிக்கிகொண்டார்.
தனியாக சிக்கிய மாதேஷை எஸ்ஐ செல்வராகவன் பிளாஷ்டிக்கிலான நீளமான பைப் கொண்டு கடுமையாக தாக்கி இழுத்து வந்தார். ஒரு கட்டத்தில் மைனர் மாதேஷை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியபடியே கண்மூடித்தனமாக அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.
சூதாட்டம் ஆடுபவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்வது சரியான நடவடிக்கைத்தான் என்றாலும் கையில் சிக்கியவரை கைபிள்ளை போல தாக்குவது காவல்துறையின் கண்ணியத்தை மீறும் செயல் என குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எஸ்.ஐ.செல்வராகவன் தாக்கியதில் சீட்டாட்ட மைனரின் முதுகு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்படுகின்றது.
சினிமாவில் போலீஸ் வேடம் போட்ட கதாநாயகர்கள் வேகம் காட்டினால் ரசிகர்கள் விசில் அடிப்பார்கள் நிஜத்தில் குற்றவாளியை பிடித்து இப்படி அடித்து உதைத்தால் மனித உரிமை அதிகாரிகள் கட்டம் கட்டி விடுவார்கள் என்பதை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உணரவேண்டும்.
ஆட்டோ ஓட்டுனரின்இரு கைகளையும் முறித்த போலீசார்..! ஆட்டோ ஓடியதால் ஆத்திரம்
ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின், இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு மத்தியில், ஊரடங்கை மதிக்காத ஆட்டோ ஓட்டுனரை பிடித்து இரு கைகளையும் முறித்து விட்டதாக சென்னை கொருக்குபேட்டை போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை நிலை நாட்டவும் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கவும் இரவு பகல் பாராமல் சேவை நோக்கோடு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஊரடங்கை மீறும் வாகன ஓட்டியை தடி கொண்டு தாக்கிய காவல்துறையினரை எச்சரித்த டிஜிபி திரிபாதி, வாகன ஓட்டிகளை தாக்கவோ, அவமானப்படுத்தும் விதமாக தண்டனை வழங்கவோ கூடாது என்று அறிவுறுத்தினார்.
சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் அறிவுறுத்தலின் பேரில், கையில் தடியே இல்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தி சொல்லி வருகின்றனர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர். இந்த நிலையில் கொருக்குப்பேட்டை காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுனரின் இரு கைகளும் முறிக்கப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரை சேர்ந்த பாபு என்ற ஆட்டோ ஓட்டுனர் ஊரடங்கை மீறி கோயம்பேட்டிற்கு ஆட்டோவில் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. அப்போது இரு சக்கர வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இரு போலீசார் ஆட்டோவை மறித்ததாகவும், போலீசில் சிக்கினால் ஆட்டோவை பறிகொடுக்க வேண்டி இருக்குமே என்று பாபு ஆட்டோவுடன் தனது வீட்டுக்கே திரும்பிச்சென்றுள்ளார்.
அவரை விரட்டிச்சென்ற இரு காவலர்களும் கையில் வைத்திருந்த லத்தியால் சரமாரியாக தாக்கி ஆட்டோவுடன் காவல் நிலையம் அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது. மீட்க சென்ற உறவினர்கள் முன்னிலையிலும் பாபு தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
காதில் இருந்து ரத்தம் வழிய, ஒரு கட்டத்தில் இரு கைகளையும் தூக்க இயலாமல் அலறித்துடித்த ஆட்டோ ஓட்டுனர் பாபுவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இரு கைகளும் முறிந்து விட்டதாக கூறி மாவுக்கட்டு போட்டு விட்டுள்ளனர் மருத்துவர்கள். காதில் வலி இருந்த போதும் போலீசாரின் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்காமல் உடனடியாக வெளியேற்றியதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனை முற்றிலும் மறுத்துள்ள கொருக்கு பேட்டை காவல்துறையினர், தாங்கள் எந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரையும் தாக்கவில்லை என்றும், தங்களுக்கும் இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லை என்றும் கூறியுள்ளனர். அப்படியென்றால் போலீஸ் உடையில் கொருக்கு பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆட்டோ ஓட்டுனரின் கைகளை முறித்தது யார்? என்ற கேள்விக்கு அவர்களிடம் இதுவரை பதில் இல்லை..!
ஊரடங்கை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதம் விதிப்பது தான் போலீசாரின் கடமை என்ற நிலையில் எந்த ஒரு குற்றவழக்கிலும் தொடர்பில்லாத ஆட்டோ ஓடுனரின் இரு கைகளையும் முறித்து அனுப்பியது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பல ஆயிரம் காவலர்களின் மகத்தான மக்கள் பணி, சமூக சேவை ஆகியவை, ஒரு சில போலீசாரின் அத்துமீறல்களால் கெட்டுப்போய் விடுகின்றது என்பதே கசப்பான உண்மை..!
–குண்டூசி