புதையலில் கிடைத்த தங்கக் காசுகள் ! பங்கு பிரிப்பதில் தகராறு ? “ஆயிரம் பொற்காசுகள்” விமர்சனம்
கே.ஆர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ராமலிங்கம் தயாரிப்பில், விதார்த், அருந்தி நாயர், பருத்திவீரன் சரவணன், ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில், ரவி முருகையா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஆயிரம் பொற்காசுகள்”.
கதைப்படி… தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிபட்டி கிராமத்தில் எந்த வேலையும் பார்க்காமல் அரசின் இலவசங்களை வாங்கி வைத்துக்கொண்டு, திருமண செய்து கொள்ளாமல் தன்னந்தனியாக ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஆனிமுத்து ( சரவணன் ). இவரது தங்கை மகன் தமிழ் நாதன் ( விதார்த் ) இவரிடம் வந்து சேருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தில் அரசு மானியத்துடன் அனைவரும் கழிவறை கட்டுகின்றனர். ஆனிமுத்து தனது எதிர்வீட்டில் வசிக்கும் கோவிந்தன் கட்டிய கழிவறையை தான் கட்டியதாக போட்டோ எடுத்து 12 ஆயிரம் மானியத் தொகையை வாங்கி சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்.
இதற்கிடையில் அந்த கிராமத்தில் பெட்டி கடை நடத்திவரும் பூங்கொடி ( அருந்தி நாயர் ) தமிழை பார்த்ததும் அவர்மீது காதல்வயப்பட, இது அவரது தாயார் சரசுக்கு தெரிந்ததும் ஆனிமுத்து வீட்டிற்கே வந்து சண்டை போடுகிறார்.
பின்னர் கழிவறை கட்டாத விஷயம் ஊராட்சி மன்றத் தலைவர் கவணத்திற்கு செல்ல, ஐந்து தினங்களில் ஆனிமுத்து கழிவறையை கட்டி முடிப்பதாக கூறுகிறார். ஆனிமுத்து, தமிழ் இருவரும் கழிவறை கட்டுவதற்கு குழி தோண்டுகின்றனர். பின்னர் மயானத்தில் குழிதோண்டும் அரிச்சந்திரன் ( ஜார்ஜ் மரியான் ), ஆண்டவன் ( பவன் ராஜ் ) இருவரும் இணைகின்றனர். அரிச்சந்திரன் தோண்டும் போது ஒரு கலசத்தில் தங்க நாணயங்கள் கிடைக்கிறது. அதை அவர் மறைக்க நினைத்தபோது ஆனிமுத்து, தமிழ் இருவரும் பார்த்து விடுகின்றனர். பின்னர் மூவரும் பங்கு பிரித்துக் கொள்ள சம்மதித்து ஆண்டவனுக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றனர். மறுநாள் பங்கு பிரிப்பதற்கு அரிச்சந்திரன் வந்தபோது அவர்மீது ஆனிமுத்து தாக்குதல் நடத்த அரிச்சந்திரன் சுயநினைவு இழக்கிறார்.
அதன்பிறகு அந்த நாணயங்களை இருவரும் பங்கு பிரித்தார்களா ? அல்லது அரசிடம் ஒப்படைத்தார்களா ? என்பது மீதிக்கதை…
கிராமங்களில் அரசின் இலவச திட்டங்கள், எவ்வாறெல்லாம் மக்களுக்கு பயண்படுகிறது, அதை பயண்படுத்தி மக்கள் எப்படியெல்லாம் சோம்பேறிகளாக மாறுகிறார்கள், பூமிக்கு அடியில் கிடைத்த தங்க நாணயங்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊரே பங்குபோட நினைக்கும் மக்களின் பேராசையையும், அருமையான திரைக்கதையிடன் கலகலப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
விதார்த் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். பருத்திவீரனுக்கு பிறகு படம் முழுவதும் கலகலப்பான ஒரு கதாப்பாத்திரம் சரவணனுக்கு அமைந்திருக்கிறது.
படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.