மகனை மந்திரியாக்க டாஸ்மாக் தங்கமணியோடு பேரம் பேசிய ராமதாஸ்: டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கடலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்திரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். முத்தாண்டிகுப்பம் கடைவீதி, நெய்வேலி புதுநகர் மெயின் பஜார், வடலூர் ஆகிய இடங்களுக்கு சென்றார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசும்போது, “ அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பா.ம.க. இணைந்தது கேள்விக்குறியான செய்தியாக உள்ளது. மகனை மந்திரியாக்க டாஸ்மாக் தங்கமணியோடு பேரம் பேசியுள்ளார் ராமதாஸ். பா.ம.க. இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என கூறியிருந்தனர். ஆனால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்த கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த அரசை இனிமேலும் தொடரவிடக்கூடாது. எனவே மக்கள் பொறுத்திருந்தது போதும்.
எனவே உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து எங்களை வெற்றி பெற செய்யவேண்டும். தமிழர்கள் தான் இனிமேல் பாராளுமன்றத்தில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை தமிழர்களுக்கு மட்டுமே தரக்கூடிய எங்கள் அணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் என்னிடம் பலகுறைகளை கூறினார்கள். அதில் மிக முக்கியமாக நடந்து முடிந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் மூலம் நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய புதிய ஊதியத்தை காலம் தாழ்த்தி வருவது தெரியவந்தது.
இதில் மத்திய நிலக்கரி துறை மந்திரி உடனடியாக கவன ஈர்ப்பு கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய புதிய ஊதிய மாற்று ஒப்பந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் வீடு, நிலம் இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.” என்றார்.
இதைத்தொடர்ந்து கடலூர் உழவர் சந்தை அருகில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசும்போது, ‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரையில் தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வந்ததால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தீர்கள்.
அதேபோல் 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெறச்செய்து மீண்டும் முதலமைச்சராக அமர்த்தினீர்கள். ஜெயலலிதா மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டார்.
குறிப்பாக நீட் தேர்வு அவர் உயிரோடு இருக்கின்ற வரையில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் காவிரி படுகை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், ஓஎன்ஜிசி போன்ற திட்டங்களுக்கு அனுமதிக்க மறுத்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு விவசாயிகள் எவ்வளவு போராடினாலும் மத்தியில் ஆள்பவர்களாலும் சரி, மாநிலத்தில் ஆட்சி நடத்துபவர்களும் சரி அடக்குமுறையை ஏவி விவசாயிகளை கைது செய்வதும் அதற்காக எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்காக போராடும் நிலையும் இன்றைக்கும் இருந்து வருகிறது.
இங்கு காவிரி டெல்டா பகுதியில் பூமிக்கடியில் ஹைட்ரோகார்பன் இருக்கின்றது; அதை எடுக்க வேண்டும் என்பதற்காக பெரிய பன்னாட்டு தொழிலதிபர்களுக்கு கொடுப்பதற்காக காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு மறைமுகமாக அனுமதி அளித்து இருக்கிறது.
இயற்கை வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காகவும் பல்வேறு நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் தடுத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இது ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்பவர்கள், அவருக்கு துரோகம் செய்கின்ற விதமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்ற என்னை குக்கர் சின்னத்தில் வெற்றி பெறச் செய்தார்கள். அந்த குக்கர் சின்னம் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கின்ற காரணத்தினால் அதை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்ற சதியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிமுகதான் சிறப்பாக செயல்படுகிறது- ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என வாக்களித்தீர்கள். ஆனால் அந்த இரட்டை இலை சின்னமும், அதிமுக கட்சியும் துரோகிகள் கையில் சிக்கி, அது பாரதிய ஜனதா கட்சியின் கிளைக் கட்சியாக மாறிவிட்டது’ என பேசினார்.