தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளிவந்து பொதுமக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக வசூல் மழை பொழியும் லிரிநி திரைப்படத்தின் நாயகர்களான RJ பாலாஜி, ஜெ.கே.ரித்தீஸ் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் கோபால கிருஷ்ணன் என்ற சிறுவன் பிரமாதமாக மிமிக்ரி செய்து அசத்தினான். சிறுவனின் நடிப்பைப் பார்த்து அனைவரும் அசந்து போயினர். ஆனால் அனைவரையும் சந்தோஷப்படுத்திய சிறுவனின் குடும்ப சூழ்நிலையையும், அவனுக்குப் பின்னால் இருக்கும் சோகத்தையும் வீடியோவாக அந்த அரங்கத்திலேயே வெளியிட்டார்கள். அதில் கோபால கிருஷ்ணனின் தம்பி சீனிவாசன் பிறவிக் கோளாறால் பாதிக்கப்பட்டு, காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் சிரமப்படுகிறான். அவனால் அனைவரும் உணவு சாப்பிடுவதுபோல் சாப்பிடக்கூட முடியாமல் இட்லியை கரைத்து திரவமாக சிறிது சிறிதாகத்தான் சாப்பிட முடியும் என்பதை காட்டினார்கள்.
இந்த சிறுவனின் அவல நிலையை வீடியோ காட்சிகளாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஜெ.கே.ரித்தீஸின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறுவனின் மருத்துவச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாக அந்த மேடையிலேயே அறிவித்தார். ஒரு சில தினங்களில் சிறுவனின் குடும்பத்தினரை அழைத்து அவர்களுக்குத் தேவையான பணஉதவிகளைச் செய்து சிறுவனின் தந்தையையும், சிறுவனையும் தனது சகோதரரின் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மருத்துவ பரிசோதனை செய்ய வைத்தார். பரிசோதனையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தால் மற்ற சிறுவர்களைப் போல் சீனிவாசனுக்கும் கேட்கும் திறனும், வாய் பேசுவதற்கும் முடியும் என்று மருத்துவர்கள் கூறியதும் உடனே அறுவை சிகிச்சை செய்து 7 லட்ச ரூபாய் செலவு செய்து சிறுவனை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இப்போது சீனிவாசன் மற்றவர்களைப் போல் விரும்பும் உணவை ருசித்து மகிழ்கிறான்.
இது குறித்து சிறுவனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஆனந்த் நம்மிடம் கூறுகையில், சிறுவனுக்கு பரிசோதனைகள் செய்து குறைபாடுகளை கண்டறிந்தோம். அதன்பிறகு அவனுக்குத் தேவையான சிகிச்சைகள் குறித்து முடிவு செய்தோம்.
முதலில் அறுவை சிகிச்சை செய்து மூக்கிற்கும், நாக்கிற்கும் இடையேயான எலும்பு வளர்ச்சியில்லாததால் அந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்தோம். தற்போது உணவு சாப்பிடும் நிலைக்கு தேறியுள்ளான். தற்போது பேசுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. காது கேட்பதற்கு காதொலி கருவியை பொருத்தி தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.
சிறுவன் சீனிவாசனின் தந்தை ரவிக்குமார் நம்மிடம் கூறுகையில், ஜெ.கே.ரித்தீஸ் எனது குடும்பத்தின் வறுமையையும் எனது மகனின் எதிர்காலத்தையும் உணர்ந்து தனது சொந்தப்பணம் பல லட்ச ரூபாய் செலவு செய்து தனது தம்பி டாக்டர் ஆனந்த் மூலம் சிகிச்சை அளித்துள்ளார். தற்போது எனது மகன் உணவு அருந்துவதில் இருந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. பேசுவதற்கும் காது கேட்பதற்குமான சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனது மகனுக்கு மறுவாழ்வு கொடுத்த ஜெ.கே.ரித்தீஸ்-ஐயும் அவரது குடும்பத்தாரையும் எனது வாழ்நாள் உள்ளவரை மறக்க மாட்டேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
ரவிக்குமார் போன்ற எத்தனையோ ஏழைக்குடும்பத்தினரின் இதயங்களில் குலவிளக்காக வாழ்ந்துவரும் ஜெ.கே.ரித்தீஸ்-க்கு நமது சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை கூறி விடைபெற்றோம்.