விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் : விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவ் சக்தி அறக்கட்டளை
கோடைகாலத்தில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேவ் சக்தி அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசும்போது..
நமது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு வழங்குவதை நாம் எப்போதும் பின்பற்றி வருகிறோம். அதேவகையில் இந்த உயிரினங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீரை வழங்குவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தெருநாய்களுக்கு குடிப்பதற்கு சரியான தண்ணீர் கிடைக்காத போது, தண்ணீருக்காக சாக்கடையைச் சுற்றிச் சென்று, இறுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அந்த உயிரினங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில் இந்த முயற்சியை சேவ் சக்தி அறக்கட்டளை உருவாக்கியுள்ளது.
செல்லப்பிராணிகளை நாம் எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை காருக்குள் சில நிமிடங்கள் கூட பூட்டி வைக்க வேண்டாம். விலங்குகளின் நலனுக்காக ஒவ்வொரு மனிதனும் பொறுப்பேற்க வேண்டும். மனிதகுலத்தை காப்பாற்றுவதற்காக கோவிட் 19க்கு ஒவ்வொருவரும் எப்படி தடுப்பூசி போட்டார்களோ அதுபோல, உயிரினங்களுக்கு உதவ நாம் முன்னோக்கிச் சென்று ஒரு சமூகமாக நாம் செயல்பட வேண்டும். இந்த முயற்சியை தொடங்குவதன் மூலம் உலக கால்நடை தினமான 2022 மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்காக சேவ் சக்தி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நன்றி என்றார்.
ஒவ்வொருவரும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தங்களது வீட்டு வாசல், ஜன்னல் ஓரங்கள் மற்றும் மொட்டை மாடிக்கு வெளியே ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வழங்குவதை தாங்களாகவே பின்பற்ற முடியும். இத்தகைய சிறிய பங்களிப்பு இத்தகைய உயிரினங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். செல்லப்பிராணிகள் எப்போதும் நமக்காக ஒரு நல்ல உலகத்தை உருவாக்குகின்றன. நாமும் அவர்களுக்காக அதையே செய்ய வேண்டும். தடுப்பூசி, நிலைப்படுத்துதல் மற்றும் விலங்குகளின் பல பிரச்சாரங்கள் போன்ற பல்வேறு உன்னத முயற்சிகளை சேவ் சக்தி அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.
சவேரா ஹோட்டல் தலைவர் ஸ்ரீமதி நீனா ரெட்டி பேசும்போது..
தெருநாய்களைப் பராமரிக்கும் செயல்களை பொறுத்தவரை இந்த அறக்கட்டளையின் நிர்வாகி சாயா அற்புதமான நபராக இருந்தார். கோட்டூர்புரம் நாய்கள் நலத்திட்டத்தைப் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி. இங்கு உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு தெருக்களாக ஒதுக்கப்படுகிறது. மேலும் ரிவர் வியூ சாலையில் இருக்கும் 10, 11 தெருநாய்களை நான் கவனித்துக் கொள்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு உணவு, ஒரு கிண்ணம் தண்ணீர் போதுமானது. அவர்கள் மரங்களின் நிழல்களில் அமைதியாக தூங்குகிறார்கள். அவர்களுக்கு அவ்வப்போது கருத்தடை செய்வதையும் உறுதிப்படுத்துகிறோம்.
நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, தமிழ்நாடு பல்வேறு துறைகளில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. எல்லாவற்றையும் தானாக செய்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, இந்தியாவிலேயே முதல்முறையாக தெருநாய்கள் மற்றும் பிற உயிரினங்களின் நலனுக்காக அர்பணிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. குரல் இல்லாத உயிரினங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் வைப்பது உயிரினங்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நமது கலாச்சாரத்தில் பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு அதிக மதிப்பு கொடுக்கிறோம். உண்மையில் மற்ற மனிதர்களின் பசியைப் போக்குவது மிகப் பெரிய செயல். அதேபோல் இந்த விலங்குகளையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா நமக்கு ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. மேலும் மனிதர்களைப் போல் மற்ற உயிரினங்களின் நல்வாழ்வுக்கான நமது அன்பையும், உறவையும் உயர்த்தியுள்ளது.
–நமது நிருபர்