பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வெடி விபத்து… அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 35 க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்களும் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டுவரும் கல்குவாரிகள் கனிமவளத்துறையில் முறையாக அனுமதி பெற்று விதிமுறைகளை பின்பற்றி இயக்கவேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி குடியிருப்புக்கு அருகே கல்குவாரிகள் செயல்படுவதனாலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் வெடிமருந்துக்களை உபயோகித்து கற்களை எடுப்பதால், குவாரிகள் மீது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான புகார் மனுக்கள் அளித்துள்ளனர்.
இந்நிலையில் மாலை கோடங்கிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெத்தாம்பூச்சிபாளையம் பகுதியில் விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 02 வரை கல்குவாரி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் கல்குவாரியின் உரிமம் காலாவதியாகி ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது குவாரியில் இருந்து திடீரென அதிக சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு சுமார் 4 கிலோ மீட்டர் வரை சக்திவாய்ந்த அதிர்வு உணரப்பட்டது. மேலும் பல அடி உயரத்திற்கு புகை மூட்டம் எழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சின்ன கோடங்கிபாளையத்தை சேர்ந்த சின்னக்குட்டி என்பவரது வீட்டு கூரை சேதமடைந்தது. மேலும் மூர்த்தி என்பவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கி விழுந்து சிதறியது, அதேபோல் தங்கவேல் ஆகியோரது வீடு உட்பட பல வீடுகளின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் குவாரி குடியிருப்பில் குடியிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமி என்பவருக்கு இரண்டு கைகளும் பலத்த தீக்காயங்களுடனும், அருகில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் சிறு காயத்துடனும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதல்கட்டமாக கல்குவாரியில் வேலைபார்த்துவரும் லட்சுமிக்கு செந்தில்குமார் என்கிற கணவரும் குழந்தையும் உள்ளதாகவும்,லட்சுமி சொந்த ஊரான ஆந்திரா சென்றுவிட்டு கோடங்கிபாளையம் திரும்பி வந்த நிலையில் வீட்டில் இருந்தபோது சிலிண்டரில் இருந்து கசிந்த கியேஸ் மள மளவென பற்ற ஆரம்பித்தவுடன் லட்சுமியின் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், உடனடியாக அங்கிருந்து குழந்தையை தூக்கிக்கொண்டு காயங்களுடன் உயிர்தப்பி இருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கல்குவாரி மீது நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காலாவதியானதாக கருதப்படும் கல்குவாரி குறித்து கனிமவளத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இதனிடையே கல்குவாரியில் நடந்த விபத்தை மறைக்க ஒரு கும்பல் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.