தமிழகம்

மதுபானம் வாங்க ஆதார்?: லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த பரணிபாரதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில்,” தான், 30.12.2018-ல் நடந்த 325 மின் வாரிய உதவி பொறியாளர்களுக்கான தேர்வில் தேர்வெழுதியதாக கூறியுள்ளார். அப்போது, எழுத்துத்தேர்வுக்கு முன்பு கேள்வித்தாள் வெளியானது எனவும் இது தொடர்பான விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி? என்பது தற்போது வரை தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு பணிக்கு 5 பேர் வீதம் 1575 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும் இதனால் உதவி பொறியாளர் நியமன நடைமுறைக்கும், நியமன உத்தரவு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் இதற்காக நடந்த எழுத்துத்தேர்வை ரத்து செய்து, புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? இதனால் மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அரசு துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது எனவும், அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது எனவும் நீதிபதிகள் கூறினர்.
லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சப் பழக்கம் ஒழியும், லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும் என கருத்து தெரிவித்தனர்.
இதேபோல்தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,”டாஸ்மாக் கடையுடன் சேர்ந்துள்ள மதுபானக் கூடத்தில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யவும்,காலி பாட்டில்களை சேகரிக்கவும் தனி நபர்களுக்கு உரிமம் வழங்கப்படும். தற்போது இந்த உரிமம் வழங்குவதற்கான டெண்டர் தொடர்பாக மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பிப்ரவரி 21ல் அறிவிப்பாணையை வெளியிட்டார். அதில்,உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் 22 முதல் 28 வரை விநியோகிக்கப்படும் என்றும் மார்ச் 1 ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் விதிகளில்,2 கோடி வரையிலான டெண்டருக்கு 15 நாள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், இந்த டாஸ்மாக் மதுபான கூடம் தொடர்பான டெண்டருக்கு அந்த கால அவகாசம் வழங்கப்படவில்லை.இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில் குறைந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவ்வாறு அதிகாரிகள் கால அவகாசத்தை குறைப்பதாக இருந்தால் அதனை எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நடவடிக்கை இந்த அறிவிப்பில் மேற்கொள்ளப்படவில்லை. விண்ணப்பங்கள் இல்லை எனக்கூறப்பட்ட நிலையில், டாஸ்மாக் இணையத்தளத்தில் அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும் இயலவில்லை.ஆகவே, மதுரையில் மதுபானக்கூடங்களுக்கான டெண்டர் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும்“ என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. அதோடு 2 ஆண்டுகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள்,”தமிழகத்தில் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் பார்களிலேயே நடக்கின்றன. பார்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களும், இழப்புகளும் அதிகரிக்கின்றன. மாணவ, மாணவிகள் மதுவுக்கு அடிமையாவது தமிழகத்தில் அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து, தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? டாஸ்மாக் கடையின் நேரத்தை பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஏன் மாற்றக்கூடாது? தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது? பார்களுக்கான டெண்டர் அறிவிப்பு 2 ஆண்டுகளுக்கென வெளியானது ஏன்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button