உடுமலையில் அரசு கல்லூரி மாணவியின் தற்கொலை நாடகம் ! தவறான விசாரணையால் விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் மாணவிகளுக்கு அரசு வழங்கும் நிதியில் தரமான உணவுகளை வழங்கி வருகிறது விடுதி நிர்வாகம். ஆனால், கல்லூரி மாணவிகளில் சிலர் விதவிதமான உணவுகளை சாப்பிடுவதற்கு விரும்புவதாக தெரியவருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதி காப்பாளர் மீது சில பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி மாணவி ஒருவர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஆனால் மருத்துவமனையிலிருந்து இரண்டே மணி நேரத்தில் மாணவி வெளியே வந்துள்ளார். இந்த நாடகத்திற்கு பிறகு ஒரு பெரிய திட்டத்தை சில மாணவிகள் தீட்டியுள்ளனர். செல்போன் மோகத்தில் வெளியே செல்லும் சில மாணவிகள், நீண்ட நேரம் கழித்து விடுதிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். படிப்பு விசயத்தில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாகவும் இருந்துள்ளனர்.
இரவு நேரங்களில் ஆன்லைன் மூலமாக உணவுகள் ஆர்டர் செய்து சாப்பிடுவதால் விடுதியில் சமைத்து தரப்படும் உணவுகள் வீணாகிறது. எனவே வெளியே சாப்பிட விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவிக்க விடுதி காப்பாளர் தேவிகா மாணவிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி விடுதி காப்பாளரின் பொறுப்பில் இருக்கும் மாணவிகள் இரவு நேரத்தில் நீண்ட நேரம் வெளியே இருக்க கூடாது. விடுதிக்குள் சீக்கிரமாக வந்துவிட வேண்டும் என மாணவிகளிடம் அறிவுறுத்தியும் உள்ளார். தற்போதுள்ள 62 மாணவிகளில் நான்கு பேர் மட்டும் தங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பதை உணர்ந்து, கூட்டாக சேர்ந்து 20 மாணவிகளை திரட்டி, தங்களுக்கு இடையூறாக இருக்கும் விடுதி காப்பாளர் தேவிகாவுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர்.
அதேநேரத்தில் வேண்டுமென்றே பினாயில் குடிப்பது போன்ற நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளனர். பொதுவாக பினாயில் குடித்த ஒருவர் கட்டாயம் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். ஆனால், பினாயில் குடித்ததாக சொல்லும் மாணவி ஒருவர் இரண்டே மணி நேரத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது எப்படி.? மேலும், இதுசம்பந்தமாக விசாரணை செய்த அதிகாரிகள் நடந்த விபரத்தை சரியாக விசாரிக்காமல் விடுதி காப்பாளர் தேவிகா மீது நடவடிக்கை எடுத்து இடமாற்றமும் செய்துள்ளனர்.
இதே விடுதி காப்பாளர் தேவிகாவுக்கு ஆதாரவாக கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவிகள் போராட்டம் நடத்தி விடுதி காப்பாளர் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். மாணவிகளின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கும் காப்பாளர் தேவிகா இதே உடுமலை பகுதியில் தான் பணியில் இருக்க வேண்டுமென அப்போதைய கல்லூரி மாணவிகள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆனால், இப்போது அதே
காப்பாளர் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து நடவடிக்கை எடுத்திருப்பது தவறான முன் உதாரணம் ஆகும். விசாரணை அதிகாரிகள் முறையாக விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால், ஒரு தரப்பினரிடம் மட்டுமே விசாரித்து விட்டு, காப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பது ஒருதலைப்பட்சமானது என்கின்றனர். மாணவிகள் விடுதியில் தங்கி இருக்கும் போது தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு நடப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்பது போன்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.
இன்றைய தலைமுறையினர் ஆசியர்களுக்கு கட்டுப்படுவதில்லை. அதேசமயம் வெளியே தங்கி படிக்கும் இடங்களில் பாதுகாவலர்கள் பேச்சையும் கேட்பதில்லை. இதனால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் தான் சீரழிந்து போகும். இதனை அரசு அதிகாரிகள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்கிறார்கள். மேலும், இதுபோன்ற பிரச்சனைகள் எழும்போது, சரியான முறையில் விசாரணை செய்த பிறகே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சாதிக்பாட்ஷா