நீர்நிலை, அரசு புறம்போக்கு நிலம் பத்திரப்பதிவு… கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடு புகார்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் வருவாய்த்துறை ஆவணங்களில் அரசு புறம்போக்கு, நீர்நிலை, வண்டிப் பாதை, வாய்க்கால் போன்ற வகைப்பாடு கொண்ட இடங்களை லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு பத்திரப் பதிவாளர்கள் தனி நபர்களுக்கு பதிவு செய்து கொடுத்துள்ள புகார்கள் அதிகரித்து வருகிறது. இந்த புகார்களை விசாரிக்கும் உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, புகார் மனு குறித்து விசாரணை மேற்கொள்ள கோப்புகளை அனுப்பினால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
இதுபோன்ற புகார்களை ஆதாரத்துடன் கொடுத்தும் நடவடிக்கைக்காக மூன்று ஆண்டுகள் காத்திருப்பதாக புகார் கொடுத்தவர்கள் புலம்பி வருகிறார்கள். மேலும் உயர் நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, நிலங்களை மீட்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர், பதிவுத்துறை இயக்குனர் ஆகிய இருவரும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவலையுடன் காத்திருக்கிறார்கள் புகார் கொடுத்தவர்கள்.
குறிப்பாக மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் புகார் மனுக்கள், பதிவாளர்களின் முறைகேடு சம்பந்தமானது என்பதால், விசாரனை என்கிற பெயரில் விசாரிக்காமலேயே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். நீர்நிலை ஏரி புறம்போக்கு நிலங்களை பதிவு செய்து கொடுத்துள்ள புகார்கள், மாவட்ட பதிவாளர், ராயப்பேட்டை, சென்னை அலுவலகத்தில் தான் தமிழகத்திலேயே அதிகமான புகார் மனுக்கள் தேங்கிக்கிடக்கிறதாம்.