“தமிழ் பிறை” தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் மிலாதுநபி விழா
இஸ்லாமிய சமுதாயத்தின் சிற்பி என அன்போடு அழைக்கப்படும் கவிஞர், பாடலாசிரியர், பாடகர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர் காயல் இளவரசு. இவர் நடத்தும் “தமிழ் பிறை” தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவுடன் மிலாதுநபி விழாவையும் இணைத்து, முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரமாண்டமான விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
காயல் இளவரசு சாதிமத பேதமின்றி அனைத்து சமூக மக்களின் இதயங்களில் இடம்பிடித்த ஏழைப் பங்காளன். இவர் இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலியுறுத்தும் வகையில், தனது எழுத்துக்களாலும், பாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை நானூறு பாடல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார்.
இந்த விழாவில் காதர் மொய்தீன் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ) , கவிப்பேரரசு வைரமுத்து, ஜேஎம் ஆருண் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ) , நவாஸ்கனி இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், மூத்த பத்திரிகையாளர் கே.எம். சிராஜூதீன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பித்தனர். முன்னதாக அப்துல் குத்தூஸின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்கள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர்.