75,000 பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை… நிரூபித்தால் தமிழிசை பதவி விலக தயாரா? : நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய மோடி ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் சார்பில் வெளியிட்டால்கூட பிரதமர் மோடி, பா.ஜ.க தரப்பில் எந்த பதிலும் தருவதில்லை. தணிக்கை துறை அறிக்கையில் குறிப்பிட்ட ஊழல் குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. ஒரு கி.மீ சாலை போட ரூ.528 கோடி, ஒரு செல்போன் எண்ணில் 9 லட்சம் பேருக்கு ஆயுள் காப்பீடு, இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக பணம் தரப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி மோசடிகள் குறித்து மக்கள் மன்றத்தில் மோடி அரசு பதில் கூற வேண்டும்.
சபாநாயகர் செல்வம் தட்டாஞ்சாவடி பகுதியில் நில ஆர்ஜிதம் பற்றி விவரம் தெரியாமல் பேசுகிறார். ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தபோது, அந்த இடம் கையகப்படுத்த நோட்டீஸ் தரப்பட்டது. ரூ.80 லட்சம் மாநில அரசு டெபாசிட் கட்டியது. அந்த நோட்டீஸ் அனுப்பியதோடு சரி. 4 ஆண்டுகள் எந்த நடவடிக்கையும் ரங்கசாமி அரசு எடுக்கவில்லை. வருவாய்த்துறை நில ஆர்ஜிதத்தை ரத்து செய்தது.
சபாநாயகர் செல்வம், வைத்திலிங்கம் முதலமைச்சராக இருந்தபோது நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது என பொய்யான தகவலைக் கூறுகிறார். நில உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட் உத்தரவுப்படி நிலம் திருப்பி அளிக்கப்பட்டது. சபாநாயகர் செல்வம் தனது புகாரை நிரூபிக்க வேண்டும். அவர் சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் முதலில் ரங்கசாமிதான் மாட்டுவார். இதற்கு ரங்கசாமி பதில்கூற வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சபாநாயகர் செல்வம் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
புதுவையில் டெங்கு அதிகமாகப் பரவி வருகிறது. புதுவை அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், 2 பெண்கள் பலியாகியுள்ளனர். அரசு மெத்தனத்தாலும், சுகாதாரத்துறையின் காலம்கடந்த நடவடிக்கையாலும் இந்த பலி ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதித்த பின் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்கிறோம், கொசு மருந்து தெளிக்கிறோம் என்கிறார்கள். முன்னெச்சரிக்கையோடு ஏன் இந்த பணிகளை மேற்கொள்ளவில்லை?
நிபா வைரஸால் கேரளாவில் 5 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வல்சராஜ், எம்.எல்.ஏ ரமேஷ் பரம்பத் ஆகியோரை தொடர்புகொண்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். கோழிக்கோடு நகரம் புதுவையின் மாஹே பகுதிக்கு அருகில் உள்ளது. நிபா வைரஸ் கொரோனாவைவிட கொடியது. மாஹே மருத்துவத்துறை முனைப்புடன் செயல்பட்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெலங்கானா கவர்னர் தமிழிசை நிரந்தரமாக புதுவையில் தங்கியுள்ளார். புதுவையிலிருந்து தமிழக அரசை விமர்சிப்பது, குறைகூறுவது என செயல்பட்டு வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் 69 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகையை முதல் அமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். கவர்னர் தமிழிசை புதுவையில் 75 ஆயிரம் பேருக்கு மகளிர் உதவித்தொகை ரூ.1,000 கொடுக்கப்பட்டு விட்டதாகவும், தமிழக அரசு காலம்கடந்து கொடுப்பதாகவும் விமர்சிக்கிறார். இது அப்பட்டமான பொய்.
புதுவை மாநிலத்தில் ரங்கசாமி அறிவித்த பெண்கள் உதவித்தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. ஒரே ஒரு மாதம் மட்டும் ரூ.1000, ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின் 73 ஆயிரம் மனுக்கள் பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை யாருக்கும் தொகை வழங்கவில்லை. பா.ஜ.க-வினர் பொய் சொல்வதில் கைதேர்ந்தவர்கள். கவர்னர் தமிழிசை பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தவர். கவர்னராக இருந்தும் அவர் திருந்தவில்லை.
புதுவை கவர்னர் பொறுப்பு வகிப்பவர், துறை அதிகாரிகளை விசாரித்து அறிக்கை தர வேண்டும். அவர் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவதை ஏற்க முடியாது. பாராளுமன்ற தேர்தலில் நிற்க சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி மக்கள் மத்தியில் இடம்பிடிக்க நினைக்கிறார். அவர் தமிழகம், புதுவையில் எந்த தொகுதியில் நின்றாலும் போணியாக மாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்.
ஏற்கெனவே தூத்துக்குடியில் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர். அவர் நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை செயல்படுத்தும்போது கவர்னர் விமர்சனம் செய்யக் கூடாது. புதுவையில் 75 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கவில்லை என்பதை நிரூபித்தால், தெலுங்கானா கவர்னர், புதுவை பொறுப்பு கவர்னர் பொறுப்பிலிருந்து பதவி விலக தயாரா… பா.ஜ.க-வுக்கு பொய்தான் மூலதனம். தேர்தலில் நிற்க விரும்பினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வுக்கு தமிழிசை பிரசாரம் செய்ய வேண்டும். கவர்னர் அலுவலகம் பா.ஜ.க தலைமை அலுவலகமாகச் செயல்படுகிறது.
புதுவையில் மாமூல் கேட்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், மாமூல் வசூலிக்கும் கூட்டமும் வெளியே வந்துவிடும். கட்சி பாகுபாடின்றி காங்கிரஸ், தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மாமூல் கேட்கும் கூட்டம் சட்டசபையை சுற்றி வருகிறது. கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். முதலமைச்சர், சபாநாயகர் அந்தக் கூட்டத்தை சட்டசபைக்குள் நுழைய விடக் கூடாது என கூறியுள்ளனர்.
இதைத்தான் நான் தொடர்ந்து புகார் கூறி வருகிறேன். அவர்களின் வேலையே மாமூல் வசூலிப்பதுதான். இவர்கள் மிரட்டி பணம் பறிக்கின்றனர். புதுவையில் மிரட்டிப் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழும் கூட்டம் அதிகமாக உள்ளது. காவல்துறைக்கு மாமூல் மாதந்தோறும் சரியாக செல்கிறது. ஒரு அமைச்சரின் பிறந்தநாளுக்கு காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வுக்காக 50 பவுன் நகை அன்பளிப்பாக கொடுத்துள்ளனர். அதற்கான ஆதாரத்தை தேடி வருகிறேன். இது விஞ்ஞான ஊழல். இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி விசாரணை வைக்க தயாராக உள்ளாரா… முதலமைச்சர் இதை ஏன் வேடிக்கை பார்க்கிறார், லஞ்ச ஊழலில் புதுவை அரசு திளைக்கிறது. புதுவையில் மதுபானக் கடை வேண்டாம் என போராடுபவர்களை போலீஸார் அடித்து துன்புறுத்துகின்றனர். இது ஜனநாயக ஆட்சியா… அதிகார துஷ்பிரயோகம் செய்து போராட்டம் செய்பவர்களை மிரட்டுகின்றனர். ஆட்சியாளர்களின் துணையால் காவல்துறையினர் இவ்வாறு செயல்படுகின்றனர்.
புதுவையில் தரம்தாழ்ந்த, லஞ்ச லாவண்ய ஆட்சி ரங்கசாமி தலைமையில் நடக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் இதற்கு முடிவு கிடைக்கும். ரங்கசாமி, பா.ஜ.க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்” என்றார்.
– நமது நிருபர்